ஓர்லி : விமானத்தின் சக்கரம் அமைந்துள்ள பகுதியில் மறைந்திருந்து பயணம் செய்த அகதி!
28 மார்கழி 2023 வியாழன் 17:38 | பார்வைகள் : 4619
விமானத்தின் <<train d'atterrissage>> என அழைக்கப்படும் விமானச் சக்கரங்கள் அமைந்துள்ள பகுதிக்குள் மறைந்திருந்து பயணித்த அகதி ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஓர்லி சர்வதேச விமான நிலையத்தை இன்று வியாழக்கிழமை காலை 10.14 மணிக்கு வந்தடைந்த Air Algérie நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அல்ஜீரியாவின் Oran எனும் நகரில் இருந்து புறப்பட்டு ஓர்லி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த விமானத்தினை, பரிசோதகர்கள் சோதனையிட்டபோது, குறித்த சக்கரங்கள் அமைந்துள்ள பகுதியில் நபர் ஒருவர் மயங்கிக்கிடப்பதை பார்த்துள்ளனர்.
உடனடியாக மருத்துவக்குழுவினர் அவரை மீட்டு Henri-Mondor மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
20 தொடக்கம் 30 வயதுக்குட்பட்டதாக சந்தேகிக்கப்படும் குறித்த நபர், தனது முழு பயணத்தையும் மிகவும் ஆபத்தான train d'atterrissage பகுதியில் இருந்தே பயணித்துள்ளார். கிட்டத்தட்ட 12 கிலோமீற்றர் உயரத்தில் -50°C வரையான உறை குளிருக்குள் சிக்கி, மூச்சுத்திணறலுக்கும் உள்ளாகி அவர் ஓர்லி விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை இதுபோன்ற பல செய்திகளை அறிந்துள்ளோம். கடந்த ஏப்ரலில் கனடாவின் டொராண்டோ மாநிலத்தில் இருந்து நெதர்லாந்தின் Amsterdam-Schiphol விமான நிலையத்தை வந்தடைந்த ஒரு விமானத்தில், அகதி ஒருவரின் சடலம் கண்டறியப்பட்டது.
2019 ஆம் ஆண்டின் ஜூலையில், இலண்டனின் தென்மேற்கு பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் ஆண் ஒருவரது சடலம் வந்து விழுந்துள்ளது. பின்னர் விசாரணைகளில் கென்யா விமான நிலையத்தில் இருந்து ஹீதுரு விமான நிலையம் நோக்கி பயணித்த விமானத்தின் train d'atterrissage பகுதியில் இருந்து பயணித்த ஒருவரே உயிரிழந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டது.