இஸ்ரேல் மீதுஇனப்படுகொலை வழக்குப்பதிவு செய்த தென் ஆப்பிரிக்கா
30 மார்கழி 2023 சனி 03:56 | பார்வைகள் : 2406
இஸ்ரேல் காசா பிரதேசத்தின் மீது சரமாரியான தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
இந்நிலையில் சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் மீது இனப்படுகொலை வழக்கினை தென் ஆப்பிரிக்கா பதிவு செய்துள்ளது.
கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக காசாவில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 21,500க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.
இதன் காரணமாக தென் ஆப்பிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை செய்ததாக இஸ்ரேல் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக வெள்ளியன்று நீதிமன்றத்தில் அளித்த விண்ணப்பத்தில், 'காஸாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் இனப்படுகொலை தன்மை கொண்டவை, ஏனெனில் அவை பாலஸ்தீனிய தேசிய, இன மற்றும் இனக்குழுவின் கணிசமான பகுதியை அழிக்கும் நோக்கம் கொண்டவை' என தென் ஆப்பிரிக்கா விவரித்துள்ளது.
மேலும், 'காஸாவில் பாலஸ்தீனியர்களைக் கொல்வது, அவர்களுக்கு உடல் மற்றும் மனரீதியாக கடுமையாக தீங்கு விளைவிப்பது மற்றும் அவர்களின் உடல் ரீதியான அழிவைக் கொண்டு வருவதற்காக கணக்கிடப்பட்ட வாழ்க்கை நிலைமைகளை அவர்கள் மீது சுமத்துவது ஆகியவை கேள்விக்குரிய செயல்களில் அடங்கும்' எனவும் அந்த விண்ணப்பம் கூறுகிறது.
ஐ.நா.வின் உறுப்பினர்களான தென் ஆப்பிரிக்கா, இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகளும் நீதிமன்றத்திற்கு கட்டுப்பட்டவை ஆகும்.
பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் கொள்கைகள் நிறவெறிக்கு சமம் என பல மனித உரிமை அமைப்புகள் சாடியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.