Paristamil Navigation Paristamil advert login

உடல் எடை குறைக்கும் ஓட்ஸ் உப்புமா

உடல் எடை குறைக்கும் ஓட்ஸ் உப்புமா

30 மார்கழி 2023 சனி 23:09 | பார்வைகள் : 4761


உடல் எடை குறைக்க பலருக்கும் பரிந்துரைக்கப்படும் முதல் உணவு ஓட்ஸ். இதில் நார்ச்சத்துகள் அதிகமாகவும், கார்போஹைட்ரேட்டுகள் குறைவாகவும் உள்ளதால் பலரும் காலை உணவாக ஓட்ஸை பல விதமாக சமைத்து சாப்பிடுகிறார்கள். ஓட்ஸை வைத்து சுவையான உப்புமா செய்வது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் – 2 கப், 
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி, 
உளுந்து – 1 தேக்கரண்டி, 
சீரகம், 
கடுகு, 
பெருங்காயத்தூள், 
மஞ்சள் தூள்,
 உப்பு, 
வெங்காயம், 
பச்சை பட்டாணி, 
பீன்ஸ், கேரட், 
தக்காளி, 
எலுமிச்சை சாறு, 
வறுத்த வேர்கடலை, 
பச்சை மிளகாய், 
இஞ்சி, 
கொத்தமல்லி, 
கறிவேப்பிலை.

கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு நன்றாக தாளிக்க வேண்டும். பின்னர் அதில் உளுந்து, கடலை பருப்பு சேர்த்து வறுக்க வேண்டும்.

பொன்னிறமாக வறுபட்ட பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சிறு துண்டு போட்டு நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் நறுக்கி வைத்த காய்கறி வகைகளான பீன்ஸ், கேரட், தக்காளி, வேகவைத்த பட்டாணி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். பின்னர் தேவையான அளவு உப்பு, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து ஓட்ஸை சேர்த்து கலந்து விட வேண்டும்.

உப்புமா கெட்டியாக வர தண்ணீரை தேவையான அளவு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மெல்ல கிளறி விட வேண்டும். தேவையான பதம் வந்ததும் 5 நிமிடம் மூடி வேகவிட வேண்டும்.

சரியாக சமையல் ஆன பிறகு கடாயை இறக்கி எலுமிச்சை சாறு, வறுத்த வேர்கடலை சேர்த்து கிளறி கொத்தமல்லி இலைகளை தூவி விட்டால் சூடான சுவையான உடல் எடை குறைக்கும் ஓட்ஸ் உப்புமா தயார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்