புதிய மாதம் - புதிய மாற்றங்கள்!!
1 தை 2024 திங்கள் 10:04 | பார்வைகள் : 7093
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். ஜனவரி 1, இந்த புதிய மாதத்தில் பல புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. அவற்றினை இச்செய்தியில் தொகுத்துள்ளோம்.
♦ முத்திரை, பொதி சேவைகள் கட்டண உயர்வு!
முத்திரைகள் மற்றும் பொதி சேவைகளுக்கான கட்டணம் இன்று ஜனவரி 1 ஆம் திகதி முதல் அதிகரிக்கிறது. பச்சை நிற முத்திரை 1.16 யூரோக்களில் இருந்து 1.29 யூரோக்களாக 11.20% சதவீதத்தினால் அதிகரிக்கிறது. பதிவுக் கடிதங்கள் 11% சதவீதத்தால் அதிகரித்து புதிய விலையாக 5.36 யூரோக்களாக அதிகரித்துள்ளது.
♦ சிகரெட் விலை அதிகரிப்பு!
சிகரெட் பெட்டிகளின் விலை இன்று முதல் அதிகரிக்கிறது. கடந்த மே மாதம் விலை அதிகரிப்புக்கு உள்ளானதைத் தொடர்ந்து, தற்போது ஜனவரியிலும் அதிகரிக்கிறது. சிகரெட் பெட்டி ஒன்று சராசரியாக 1 யூரோவினால் அதிகரிக்கிறது. 12 யூரோக்களில் இருந்து 13 யூரோக்கள் சராசரி விலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
♦ Pôle emploi பெயர் மாற்றம்!
Pôle emploi நிறுவனம் புதிய வடிவுக்கு மாறியுள்ளது. தனது பெயரினை ‘பிரான்ஸ் திறவாய்’ France Travail என மாற்றியுள்ளதோடு, தனது இலட்சிணையையும் மாற்றியுள்ளது.
♦ உணவு பொதிகளில் புதிய Nutri-Score!
உணவுப் பொதிகளில் ஒட்டப்படும் ஊட்டச்சத்து தொடர்பான விபரங்களைக் கொண்ட ஒட்டிகளில் (Stickers) புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. Nutri-Score என அழைக்கப்படும் இவ்வகை ஒட்டிகளில் A தொடக்கம் E வரையான பிரிவுகள் உள்ள நிலையில், தற்போது அவற்றுடன், உணவு பரிந்துரைகள் (recommandations alimentaires) மற்றும் பொது சுகாதார அமைப்பு Santé publique France பரிந்துரை செய்யும் விபரங்களையும் அதோடு அச்சிடவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
♦ சிறிய அளவு ‘வேக அதிகரிப்புக்கு’ புள்ளிக்குறைப்பு இல்லை!
மோட்டார் வாகன சாரதிகள், அறிவுறுத்தப்பட்ட வீதியின் வேகத்தி விட சிறிய அளவு கூடிய வேகத்தில் பயணித்தால், அவர்களது ஓட்டுனர் உரிமத்தில் இருந்து புள்ளிகள் குறைக்கப்பட மாட்டாது எனும் புதிய சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்த வேக அதிகரிப்பு 5 கி.மீ ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 70ஒ கி.மீ வேகம் உள்ள சாலையில், அதற்கு மேல் பயணிப்பது குற்றமாகும். இருந்தபோதும் அது 75 கி.மீ வேகத்துக்கு உட்பட்டிருந்தால் அதற்கு புள்ளிகள் வெட்டப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
♦ 17 வயதில் ஓட்டுனர் உரிமம்!
இன்று முதல் பிரான்சில் 17 வயது நிரம்பி இருந்தால் நீங்கள் ஓட்டுனர் உரிமம் பெற்றுக்கொள்ள முடியும். பிரதமர் Elisabeth Borne இதனை கடந்த ஜூன் மாதம் அறிவித்திருந்தார். இன்று ஜனவரி 1 முதல் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருகிறது. 17 வயது நிரம்பியவர்கள் ’permis B' வகை ஓட்டுனர் உரிமத்தை பெற முடியும்.
♦ 100 யூரோ கட்டணத்துடன் மின்சார மகிழுந்து!
மின்சார மகிழுந்தை பெறுவதற்கு ஆரம்பத்தொகை எதுவும் செலுத்தத்தேவையில்லை. மாதம் 100 யூரோக்கள் செலுத்தி மின்சார மகிழுந்து ஒன்றை பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார். பிரான்சில் குறைந்த ஊதியம் கொண்ட 20,000 பேர் இந்த வசதியினை பெற ஏற்புடையவர்களாக உள்ளனர். ஜனவரி 1, இன்று முதல் இந்த வசதி அறிவிக்கப்பட்டுள்ளது.
♦ நவிகோ கட்டணம் அதிகரிப்பு!
நவிகோ கட்டணம் இன்று முதல் சிறிய அளவில் அதிகரிக்கிறது. கடந்த வருடம் 12% சதவீதத்தால் நவிகோ கட்டணம் அதிகரித்திருந்த நிலையில், இன்று 2.7% சதவீதத்தால் அதிகரிக்கிறது.
புதிய கட்டணமாக 86.40 யூரோக்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
♦ அடிப்படை ஊதியம் அதிகரிப்பு!
தானியங்கி முறையில் கணக்கிடப்படும் அடிப்படை ஊதியம் (smic) ஜனவரி 1, இன்று முதல் அதிகரிக்கிறது. வாரத்துக்கு 35 மணிநேரங்கள் வேலைபார்க்கும் ஒருவர் மாதம் 1.13 % சதவீதத்தினால் ஊதிய உயர்வைச் சந்திக்கிறார். 1,766.92 யூரோக்களாக அடிப்படை ஊதியம் அதிகரிக்கிறது.
♦ நிரந்தர வேலை வாய்ப்பினை நிராகரித்தால் - கொடுப்பனவுகள் இரத்து!
வேலை தேடும் ஒருவர் ஒரு தடவைக்கு மேல் நிரந்தர வேலை வாய்ப்பை நிராகரித்தால், அவருக்கு வழங்கப்படும் கொடுப்பனவு இரத்துச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாதாந்த கொடுப்பவுகள் பெறும் வேலை தேடும் ஒருவர்,12 மாத இடைவெளியில் முதலாவது நிரந்தர வேலை வாய்ப்பினை மட்டுமே நிராகரிக்க முடியும். அவருடைய தகமைக்கு ஏற்ற ஊதியம், நிலை மற்றும் பணி அமைவிடம் போன்ற காரணிகள் பொருந்தியும், இரண்டாவது தடவை வேலை வாய்ப்பினை நிராகரித்தால் அவருக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் இரத்துச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
’பெரும் நம்பிக்கைக்குரிய ஆண்டு! - புதுவருட வாழ்த்துச் செய்தி வெளியிட்ட ஜனாதிபதி மக்ரோன்!