அழகிய தமிழ்நாட்டில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது - பிரதமர் மோடி
2 தை 2024 செவ்வாய் 06:38 | பார்வைகள் : 2111
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் 30 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.
பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-
வணக்கம், எனது மாணவ குடும்பமே... இந்த ஆண்டின் முதல் அரசு நிகழ்ச்சியாக தமிழகத்திற்கு வந்துள்ளேன். பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா எனக்கு மிகவும் சிறப்பானது. இளைஞர்களுடன் மற்றும் அழகிய மாநிலமான தமிழ்நாட்டில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. பட்டம் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் அவரது பெற்றோருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
பண்டைய காலத்திலேயே காஞ்சி, மதுரை நகர்கள் கல்வியில் சிறந்து விளங்கின. பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு வரும் முதல் பிரதமர் என்பதில் நான் பெருமைகொள்கிறேன்.
20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காந்தி, அண்ணாமலை செட்டியார் பல்கலைக்கழகங்களை தொடங்கினர். பல்கலைக்கழகங்கள் எப்போதெல்லாம் சிறந்து விளங்குகிறதோ அப்போதெல்லாம் நாடு வளர்ச்சியடையும். கல்வி என்பது அறிவோடு சகோதரத்துவத்தையும் வளர்க்க வேண்டும்.
மொழியையும், வரலாற்றையும் படிக்கும்போது கலாசாரம் வலுப்படும். புதியதோர் உலகுசெய்வோம் என்ற பாரதிதாசனின் கூற்றுப்படி 2047-ஐ நோக்கி பயணிப்போம். இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியாவின் திறமையை நமது இளைஞர்கள் உலகுக்கு பறைசாற்றுகிறார்கள்’ என்றார்.