அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு: ஜன., 4 வரை மீனவர்களுக்கு தடை
2 தை 2024 செவ்வாய் 06:42 | பார்வைகள் : 1796
அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால், நாளை மறுநாள் வரை மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரபிக் கடலின் தென் கிழக்கு மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது. இது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று வலுப்பெற்று, அதே இடத்தில் நிலவும்.
இதனால், லட்சத்தீவு, அரபிக்கடலின் தென் கிழக்கு மற்றும் அதையொட்டிய தென் மேற்கு பகுதி, மத்திய கிழக்கு பகுதி ஆகியவற்றில், மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.
எனவே, இந்த பகுதிகளுக்கு நாளை மறுநாள் வரை மீனவர்கள் செல்ல வேண்டாம். சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும். மாநிலத்தின் சில இடங்களில், லேசான மழை பெய்யும். பல இடங்களில் காலை நேர பனி மூட்டம் காணப்படும்.
நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை பகுதியில், 1 செ.மீ., மழை பெய்துள்ளது. வேறு இடங்களில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு மழை பெய்யவில்லை. மாநிலம் முழுதும் வறண்ட வானிலை நிலவியது. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.