தமிழகத்தில் காசநோய் 2.69 சதவீதம் அதிகரிப்பு
2 தை 2024 செவ்வாய் 06:46 | பார்வைகள் : 2766
தமிழகத்தில் கடந்தாண்டு காசநோயால் 96,709 பாதிக்கப்பட்டுள்ளனர்; 2022ம் ஆண்டை விட, 2.69 சதவீதம் அதிகம்.
வரும் 2025ம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதன் பயனாக, காசநோய் தொடர்பான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. காசநோயாளிகளை கண்டறிதல், கூட்டு மருந்து சிகிச்சை அளித்தல், தொடர் கண்காணிப்பு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
நோயாளிகள் வீடுகளுக்கே சென்று மருந்துகள், சளி மாதிரிகள் எடுப்பது, 'எக்ஸ்ரே' எடுப்பது போன்ற பணிகளும் செய்யப்படுகின்றன.
மத்திய அரசு அறிக்கையின்படி, நாடு முழுதும், 25 லட்சம் பேருக்கு காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில், காசநோய் பாதிப்பு அதிகமாக உள்ளது.
தமிழகத்தில், 2023ம் ஆண்டில், 96,709 பேர் காசநோய்க்கு சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களில், 73,488 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 23,221 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றுள்ளனர்.
அதற்கு முந்தைய, 2022ம் ஆண்டில், 94,171 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 2.65 சதவீதம் கடந்தாண்டு அதிகரித்துள்ளது.