Paristamil Navigation Paristamil advert login

பிரதமர் மோடியின் தமிழ் பற்றால் நெகிழ்ந்த திருச்சி

பிரதமர் மோடியின் தமிழ் பற்றால் நெகிழ்ந்த திருச்சி

2 தை 2024 செவ்வாய் 09:51 | பார்வைகள் : 2705


தமிழ் மொழியின் பெருமையை கூறாமல் என்னால் இருக்க முடியவில்லை என்றும், தமிழ் பண்பாட்டை பற்றி பேசாத நாளே இல்லை எனவும் பிரதமர் மோடி திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார்.

திருச்சி விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன முனையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும், விமானத்துறை, ரயில்வே, நெடுஞ்சாலை, ஆயில், காஸ், கப்பல்துறை மற்றும் உயர் கல்வித்துறை என மொத்தம் ரூ.20,140 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். 

தமிழில் பேசிய மோடி

இந்த விழாவில் ‛வணக்கம், எனது தமிழ் குடும்பமே, முதலில் உங்கள் அனைவருக்கும் 2024 புத்தாண்டு நல்வாழ்த்துகள்.'  என தமிழில் கூறி பிரதமர் மோடி பேச்சை துவக்கினார். மேலும் அவர் பேசியதாவது: இந்த ஆண்டில் எனது முதல் நிகழ்ச்சி தமிழகத்தில் நடப்பதை பாக்கியமாக கருதுகிறேன். ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் தமிழக மக்களுக்காக கொண்டுவந்துள்ளோம். இதனால் தமிழகம் மேலும் வளர்ச்சியடையும். துவங்கப்பட்ட திட்டங்களால் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும்.

வெள்ள பாதிப்பு

கடந்த ஆண்டின் இறுதியில் மழை, வெள்ளம் மூலமாக அதிக வலிகளை அனுபவித்தீர்கள். கனமழையால் உயிரிழப்பு, பொருட்கள் இழப்புகள் ஏற்பட்டன. இதில் சாத்தியமான அனைத்து ஆதரவுகளையும் மாநில அரசுக்கு வழங்கி வருகிறோம். துயரமான சமயங்களில் மத்திய அரசு உறுதுணையாக இருந்து வருகிறது. 

விஜயகாந்த்

விஜயகாந்தின் மறைவு திரைத்துறைக்கு மட்டுமல்ல அரசியலுக்கும், மக்களுக்கும் இழப்பு. விஜயகாந்த் சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் கேப்டனாக திகழ்ந்தவர். அவர் தான் நிஜத்திலும் கேப்டன். திரைப்படங்களில் அவரது செயல்பாடு மூலம் மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டிருந்தார். சிறந்த தேசியவாதியாக திகழ்ந்தவர் விஜயகாந்த். எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவும் மிகவும் வேதனையை ஏற்படுத்தியது.

சர் சி.வி.ராமன் போன்ற திறமையாளர்களை இந்த தமிழக மண் உருவாக்கியுள்ளது. சர் சி.வி.ராமன் போன்ற அறிஞர்களின் பங்கு நாட்டின் வளர்ச்சியில் அளப்பரியது. திருவள்ளூவர், பாரதியார் போன்ற ஞானிகள் அற்புதமான இலக்கியங்களை படைத்துள்ளனர். நான் எப்போதெல்லாம் தமிழகம் வருகிறேனோ அப்போதெல்லாம் எனக்கு புதிய உத்வேகம் கிடைக்கிறது. 

தமிழ் மொழி

தமிழ் மொழியின் பெருமையை கூறாமல் என்னால் இருக்க முடியவில்லை. உலகின் எந்த இடத்திற்கு சென்றாலும் தமிழ் மொழியை புகழாமல் நான் இருந்ததில்லை. எனக்கு பல தமிழ் நண்பர்கள் இருக்கிறார்கள்; அவர்களிடம் இருந்து தமிழ் பண்பாட்டை அறிகிறேன். தமிழ் பண்பாட்டை பற்றி பேசாத நாளே இல்லை. தமிழ் பண்பாடு உலகெங்கும் பரவ வேண்டும் என்ற விருப்பம் எனக்கு உள்ளது. காசி தமிழ் சங்கமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் தமிழை கொண்டு செல்கின்றன. 

மேக் இன் இந்தியா தூதுவர் - தமிழகம்

25 ஆண்டுகளில் பாரதத்தை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற வேண்டும். இந்தியா உலகின் தலைசிறந்த நாடுகளின் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. நவீன கட்டமைப்பில் முதலீடு அதிகரித்துள்ளது; அதன் நேரடி பயன் தமிழகத்திற்கு கிடைத்து வருகிறது. ‛மேக் இன் இந்தியா' திட்டத்தின் சிறப்பான தூதுவராக தமிழகம் மாறி வருகிறது. திருச்சியில் திறந்து வைக்கப்பட்ட புதிய முனையத்தால் வளர்ச்சி பெருகும்; விமான நிலையத்தை மேம்படுத்தப்பட்ட சாலையுடன் இணைப்பதால் வெளிநாட்டினர் வருகை அதிகரிக்கும். 

தமிழகத்தில் ரயில் போக்குவரத்து மேம்படுத்தப்படுவதால் தொழில் வளர்ச்சியடையும். ஸ்ரீரங்கம், சிதம்பரம், மதுரை, ராமேஸ்வரம், வேலூர் ரயில் மூலம் இணைக்கப்படுகிறது. சுதந்திரத்திற்கு பிறகு முதன்முறையாக மீன்வளத்திற்கு என தனி அமைச்சகம் பா.ஜ., ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. மீனவர்கள் நலனுக்காக தனி அமைச்சகம் மூலம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு என தனியாக கிசான் அட்டைகள் கொடுக்கப்பட்டன.

மாநிலத்தின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி என்ற நோக்கில் மத்திய அரசு செயல்படுகிறது. முன்பை விட 3 மடங்கு அதிக நிதியை தமிழகத்திற்கு மத்திய அரசு செலவு செய்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் மாநிலங்களுக்கு ரூ.120 லட்சம் கோடி நிதியை மத்திய அரசு அளித்துள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு பெரும் நிதியை செலவு செய்து வருகிறது. தமிழக இளைஞர்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. அவர்களிடம் இருக்கும் உற்சாகம்தான் வளர்ச்சியடைந்த பாரதத்தின் நம்பிக்கையாக மாறும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

அமிதிஸ்ட் விடுதி சிறப்புகள்

வைர விழாவை முன்னிட்டு, திருச்சி, என்.ஐ.டி.,யில் 1.2 லட்சம் சதுர அடியில், நான்கு மாடிகளுடன், 506 மாணவர்கள் தங்கும் வகையில், 253 அறைகளுடன் 'அமிதிஸ்ட்' விடுதியை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.<p></p><p><b> இதன் சிறப்பம்சங்கள்

* திருச்சி என்.ஐ.டி.,யில் புதிதாக கட்டப்பட்ட 'அமிதிஸ்ட்' விடுதி இந்தியாவில் உள்ள என்.ஐ.டி.,களில் முதலிடத்தில் உள்ளது. 

*திருச்சி, என்.ஐ.டி.,யில் 2019- 20ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு 10 சதவீதம் சிறப்பு ஒதுக்கீடு (இ.டிபிள்யூ.எஸ்.,) வழங்கப்பட்டது. அதனால், மாணவர் சேர்க்கை அதிகரித்தது.

*அதற்காக, வைபை, புரொஜக்டர் போன்ற நவீன வசதிகளுடன், இந்திய அரசு நிதி, 41 கோடி ரூபாயில், 1.2 லட்சம் சதுர அடியில், நான்கு மாடிகளுடன், 506 மாணவர்கள் தங்கும் வகையில், 253 அறைகளுடன் 'அமிதிஸ்ட்' விடுதி கட்டப்பட்டுள்ளது.

*என்.ஐ.டி.,யின் வைர விழாவில் திறக்கப்படும், இந்த விடுதி முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.

விமான முனையம்
 
பிரதமர் திறந்து வைத்த இந்த முனையம், ஆண்டுதோறும், 44 லட்சத்துக்கும் அதிகமான பயணியரை கையாளும் வகையிலும்; கூட்டம் அதிகம் உள்ள நேரங்களில், ஒரே நேரத்தில் 3,500 பேரை கையாளும் திறனுடனும் உருவாக்கப்பட்டு உள்ளது. புதிய முனையத்தில் பயணியர் வசதிக்காக, பல்வேறு அதி நவீன வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

நான்கு வழிச்சாலை திட்டங்கள் 

இன்று, பிரதமர் மோடி,  திருச்சி - கல்லகம் பிரிவில், 39 கி.மீ., நான்கு வழிச்சாலை;  கல்லகம் - மீன்சுருட்டி பிரிவில், 60 கி.மீ., நீளத்திற்கு நான்கு மற்றும் இரு வழிச்சாலை; செட்டிகுளம் - நத்தம் பிரிவில், 29 கி.மீ., நான்கு வழிச்சாலை; காரைக்குடி - ராமநாதபுரம் பிரிவில், 80 கி.மீ., இரு வழிச்சாலை; சேலம் - திருப்பத்துார் - வாணியம்பாடி சாலையில், 44 கி.மீ., நீளத்திற்கு நான்கு வழிச்சாலை திட்டங்களையும், பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். காமராஜர் துறைமுகத்தின் பொது சரக்கு கப்பல் தங்குமிடம் இரண்டை, நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும், 9,000 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு திட்டங்களை, பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அடிக்கல்

முகையூர் முதல் மரக்காணம் வரை, 31 கி.மீ.,க்கு நான்கு வழிச்சாலை அமைக்க அடிக்கல் நாட்டினார். கிருஷ்ணகிரி முதல் கோவை வரை, 323 கி.மீ., இயற்கை எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்துக்கு, அடிக்கல் நாட்டப்படுகிறது. சென்னை வல்லுாரில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள தரைவழி முனையத்திற்கான பொது வழித்தடத்தில், மல்டி பிராக்ட் குழாய்கள் அமைக்கும் பணிக்கும், பிரதமர் அடிக்கல் நாட்டினார்.


கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில், 400 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள, விரைவு எரிபொருள் மறு சுழற்சி உலையை, நாட்டுக்கு அர்ப்பணித்தார். இது, முற்றிலும் இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தில், 500 படுக்கைகள் கொண்ட, மாணவர் விடுதியையும் திறந்து வைத்தார்.

ரயில்வே திட்டங்கள்

திருச்சியில் நடக்கும் நிகழ்ச்சியில், சேலம் - மேக்னசைட் சந்திப்பு - ஓமலுார் - மேட்டூர் அணை பிரிவில், 41.4 கி.மீ., இரட்டை ரயில் பாதை திட்டம்; மதுரை - துாத்துக்குடி இரட்டை ரயில் பாதை அமைக்கும் திட்டம்; திருச்சி - மானாமதுரை - விருதுநகர் ரயில் பாதை மின்மயமாக்கம்; செங்கோட்டை - தென்காசி சந்திப்பு - திருநெல்வேலி - திருச்செந்துார் ரயில் பாதை மின்மயமாக்கல் போன்ற திட்டங்களையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இத்திட்டங்கள், தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் உதவும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்