வெள்ள அனர்த்தம் தொடர்கிறது! - சிவப்பு மற்றும் செம்மஞ்சள் எச்சரிக்கை!
3 தை 2024 புதன் 06:21 | பார்வைகள் : 3522
கடந்த சில நாட்களாக பிரான்சின் பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. வெள்ளம் காரணமாக நேற்று செவ்வாய்க்கிழமை பா-து-கலே மாவட்டத்துக்கு ‘சிவப்பு’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று புதன்கிழமையும் அந்த அனர்த்தம் தொடர்கிறது.
Finistère, Nord, Meurthe-et-Moselle, Ardennes, Meuse மற்றும் Moselle ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு வெள்ளம் காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை முதல் இந்த பட்டியலில் Finistère மாவட்டமும் இணைந்துள்ளது.
அதேவேளை, பா-து-கலே மாவட்டம் இன்று நான்காவது நாளாக வெள்ள அனர்த்தத்தைச் சந்திக்கிறது. இரண்டாவது நாளாக ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தோடு, மணிக்கு 100 கி.மீ வரையான புயல் எச்சரிக்கைக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தலைநகர் பரிஸ் மற்றும் இல் து பிரான்ஸ் மாகாணம் உள்ளிட்ட நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. பரிசில் நேற்று மாலை புயல் காரணமாக சில பூங்காக்கள், தோட்டங்கள் மற்றும் கல்லறைகள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, அவசரகால நடவடிக்கைகளுக்காக தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.