பிரித்தானிய விமான நிலையங்களில் அறிமுகமாகும் புதிய திட்டம்...
3 தை 2024 புதன் 10:38 | பார்வைகள் : 2655
பிரித்தானிய விமான நிலையங்களில், பாஸ்போர்ட்டுடன் நீண்ட வரிசையில் காத்து நிற்கவேண்டிய அவசியம் இருக்காது என்னும் நிலை உருவாக உள்ளது.
அதாவது முகத்தை அடையாளம் காணும் தொழில் நுட்பம் மூலம், விரைவாக மக்களை பிரித்தானியாவுக்குள் நுழைய அனுமதிக்கும் வகையில் எல்லைப் பாதுகாப்புப் படை திட்டங்கள் தீட்டி வருகிறது.
அவசரமான சூழலில் பிரித்தானியாவுக்கு வருவோர் கூட, விமான நிலையங்களில் பாஸ்போர்ட் சோதனைக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் ஏற்படும் தாமதம், பதற்றம் முதலான பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வர பிரித்தானிய எல்லைப் பாதுகாப்புப் படை திட்டமிட்டுவருகிறது.
அவுஸ்திரேலியா, மற்றும் துபாயில், சுமார் 50 நாடுகளைச் சேர்ந்தவர்கள் விமான நிலையங்கள் வழியாக நாட்டுக்குள் நுழையும்போது, முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் மூலமாக அவர்கள் அடையாளம் காணப்படுவதால், அவர்கள் தங்கள் பாஸ்போர்ட்களை விமான நிலைய ஊழியர்களிடம் கொடுத்து, அவர்கள் அதை சரிபார்க்கவேண்டிய அவசியம் இல்லை என்னும் நிலை உள்ளது.
அதே தொழில்நுட்பத்தை பிரித்தானியாவிலும் பயன்படுத்த பிரித்தானிய எல்லைப் பாதுகாப்புப் படை திட்டமிட்டு வருகிறது. இந்த ஆண்டில், பிரித்தானிய விமான நிலையங்களில் அதற்கான சோதனை முயற்சிகள் துவங்க உள்ளன.
இந்த திட்டம் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் நிலையில், மக்கள் பிரித்தானியாவுக்குள் நுழைய பாஸ்போர்ட்டுடன் நீண்ட வரிசையில் காத்திருக்கவேண்டிய அவசியம் இருக்காது.
விமான நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு நுழைவாயில்கள் (e-gates), பயணிகளின் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் மூலம், ஒருவரை பிரித்தானியாவுக்குள் அனுமதிப்பதா இல்லையா என இனி முடிவு செய்யும்.
இதுகுறித்து விளக்கிய பிரித்தானிய எல்லைப் பாதுகாப்புப் படை டைரக்டர் ஜெனரலான Phil Douglas, இத்திட்டம் மூலம், மக்களைக் குறித்த பல தகவல்களை அறிந்துகொள்ள முடியும்.
அவர்கள் ஏற்கனவே பிரித்தானியாவுக்கு வந்துள்ளார்களா, அவர்கள் புலம்பெயர்தல் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடப்பவர்களா, அவர்களைக் குறித்த தகவல்கள் ஏதாகிலும் நமது பாதுகாப்பு அமைப்பில் உள்ளனவா என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.
ஆகவே, சிலருக்கு, விமானங்களில் ஏறமுடியாத நிலை உருவாகலாம் என்றார்.