இண்டியா கூட்டணி அமைப்பாளர் ஆகிறாரா நிதீஷ்குமார்?
3 தை 2024 புதன் 14:40 | பார்வைகள் : 2134
பா.ஜ.,வுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள ‛ இண்டியா' கூட்டணியின் அமைப்பாளர் ஆக பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதீஷ்குமார் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த வாரத்தில் வீடியோ கான்பரன்சிங் வாயிலான கூட்டத்தில் இந்த முடிவு அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு எதிராக, நிதீஷ்குமார், 28 எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்துள்ளார். காங்கிரஸ் தலைமையிலான இக்கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், இடதுசாரிகள், ஆம் ஆத்மி, திரிணமுல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே, திமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. டில்லியில் நடந்த 4வது ஆலோசனை கூட்டத்தில் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ஆக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை முன்னிறுத்துவது என மம்தா முன்மொழிந்தார்.
இதனை கெஜ்ரிவால் வழிமொழிந்தார். ஆனால், இதனை ஏற்க கார்கே மறுத்துவிட்டார். பிரதமர் வேட்பாளராக கார்கே பெயர் முன்மொழியப்பட்டது, இண்டியா கூட்டணி உருவாக காரணமாக இருந்த நிதீஷ்குமாருக்கு ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் அளித்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் நிதீஷ்குமார் அதனை மறுத்து இருந்தார்.
இந்நிலையில் மீடியாக்களில் வெளியான தகவலில் கூறப்பட்டு உள்ளதாவது: ‛ இண்டியா' கூட்டணிக்கு அமைப்பாளர் ஆக நிதீஷ்குமாரை நியமிப்பது என காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, லாலு பிரசாத்,உத்தவ் தாக்கரே உள்ளிட்ட கூட்டணி கட்சிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது. இந்த முடிவுக்கு கெஜ்ரிவால் ஒப்புதல் அளித்துள்ளார். வீடியோ கான்பரன்சிங் வாயிலாக இந்த வார இறுதியில் நடக்கும் கூட்டத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.