கெஜ்ரிவால் இன்று கைதா? டில்லியில் பரபரப்பு
4 தை 2024 வியாழன் 03:33 | பார்வைகள் : 2313
டில்லி முதல்வர் கெஜ்ரிவால் இன்று கைது செய்யப்படலாம் என டில்லியில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதனால் அவரது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், கெஜ்ரிவாலின் வீடு மற்றும் கட்சி அலுவலகங்களில் குவிந்து வருகின்றனர். மேலும் வீட்டிற்கு செல்லும் முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன. போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அன்னா ஹசாரேயின் உதவியாளர்
கெஜ்ரிவாலை பொறுத்தவரையில் ஆரம்பகட்டத்தில் சமூகநீதி போராளி அன்னா ஹசாரேயின் வலது கரமாக இருந்து வந்தார். ஊழலுக்கு எதிராக போராடுவதை உயிர் மூச்சு கொள்கையாக வைத்து ஹசாரேயிடம் இருந்து விலகி , தாமும் ஊழலை ஒழிப்பதாக சொல்லியே கட்சியை உருவாக்கியவர் ஆம்ஆத்மி தலைவர் கெஜ்ரிவால். ஆனால் அவரே ஊழல் செய்து கைது வரை செல்லும் அளவிற்கு சென்றிருப்பது பெரும் அதிர்வை ஏற்படுத்துகிறது.
புதுடில்லியில் 2021 - 2022 நிதியாண்டில், மதுபான விற்பனை தொடர்பான கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டது. இதன் வாயிலாக பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்குக்குப்பின்னர் பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரித்தது. மதுபான கொள்கை உருவாக்கியதில் இவருக்கும் முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் அதிக பங்கு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில், துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்.
ஆஜராகாமல் தவிர்ப்பு
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி , புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, அமலாக்கத் துறை கடந்த 2023 நவ.2-ம் தேதியும் தொடர்ந்து டிச.21-ம் தேதியும் சம்மன் அனுப்பியது. பல்வேறு காரணங்களை கூறி ஆஜராவதை தவிர்த்து வந்தார். இதையடுத்து மீண்டும் ஜன. 3-ம் தேதி (நேற்று) ஆஜராக வேண்டும் எனவும் இல்லையெனில் ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரித்தது. நேற்றும் ஆஜராகவில்லை.