இலங்கை கிரிக்கெட் குறித்த நீண்ட மற்றும் குறுகிய கால திட்டம்...
4 தை 2024 வியாழன் 07:02 | பார்வைகள் : 1477
இலங்கை கிரிக்கெட்டின் எதிர்கால மேம்பாடு, 2027 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி, இவ்வருடம் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஆகியவற்றை முன்னிட்டு நீண்ட கால திட்டத்தையும் குறுகிய கால திட்டத்தையும் வகுத்துள்ளதாக புதிய தெரிவுக் குழுவின் தலைவர் உப்புல் தரங்க தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் தலைமையகத்தில் புதன்கிழமை (03) பிற்பகல் புதிய தெரிவுக் குழுவினர் நடத்திய முதலாவது ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளில் ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே உப்புல் தரங்க இதனைத் தெரிவித்தார்.
உப்புல் தரங்க தலைமையிலான புதிய தெரிவுக் குழுவில் அஜன்த மெண்டிஸ், டில்ருவன் பெரேரா, தரங்க பரணவித்தான, இந்திக்க டி சேரம் ஆகியோரும் இடம்பெறுகின்றனர்.
கடந்த மூன்று வருடங்களாக செயற்பட்ட தெரிவுக் குழுவினர் ஊடக சந்திப்பை நடத்தாததுடன் ஊடகங்களுக்கு பதில் அளிப்பதை தவிர்த்துவந்ததை உப்புல் தரங்கவிடம் சுட்டிக்காட்டியபோது, தாங்கள் ஊடகங்களை எந்நேரமும் சந்திக்க தயாராக இருப்பதாகவும் வெளிப்படைத்தன்மையுடன் சேவையாற்ற உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஸிம்பாப்வேக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாத்தை ஊடக சந்திப்பின் ஆரம்பத்தில் வெளியிட்ட உப்புல் தரங்க, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக குசல் மெண்டிஸும் உதவித் தலைவராக சரித் அசலன்கவும் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
உலகக் கிண்ணப் போட்டியில் எதிர்கொண்ட வீழ்ச்சியிலிருந்து இலங்கை அணியைக் கட்டியெழுப்ப என்ன திட்டம் இருக்கிறது எனக் கேட்டபோது,
'எமது அணியில் திறமையான வீரர்கள் பலர் இடம்பெற்றனர். ஆனால் துடுப்பாட்டத்தில் தொடர்ச்சியாக பிரகாசிக்க முடியாமல் போனதே வீழ்ச்சிக்கு பிரதான காரணம். முன்வரிசை வீரர்கள் சிறப்பாக ஆரம்பித்தாலும் கணிசமான ஓட்டங்களைப் பெறுவதில் தவறினர். சர்வதேச ஒருநாள் மற்றும் ரி 20 கிரிக்கெட் போட்டிகளில் நாங்கள் விளையாடிய காலத்தில் முதல் நான்கு துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர் கணிசமான ஓட்டங்களைப் பெறவேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்படும். ஆனால், அண்மைக்காலமாக அது சாத்தியப்படவில்லை.
'பந்துவீச்சைப் பொறுத்தமட்டில் சிறப்பாக இருந்தது. ஆனால், களத்தடுப்பு திருப்தி அளிக்கவில்லை. 9 போட்டிகளில் 16 பிடிகளைத் தவறவிட்டமை அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அவற்றில் சில பிடிகள் கடினமானவையாக இருந்திருக்கக்கூடும். ஆனால், சர்வதேச போட்டிகளில் விளையாடும்போது களத்தடுப்புதான் சிறப்பாக அமையவேண்டும். இந்தியா போன்ற துடுப்பாட்டத்தில் பலம்வாய்ந்த அணிகளுடன் விளையாடும்போது களத்தடுப்பு ஆரம்பத்திலிருந்து கடைசி வரை சிறப்பாக இருக்கவேண்டும். இவற்றை எல்லாம் கருத்தில்கொண்டே அடுத்த 4 வருட சுழற்சிக்கான அணியைக் கட்டி எழுப்பும் நீண்ட கால திட்டத்தை செயற்படுத்த ஆரம்பித்துள்ளோம். அதனால்தான் சில சிறந்த இளம் வீரர்களையும் குழாத்தில் இணைத்துக்கொண்டுள்ளோம்' என்றார்.
தேசிய அணியை மேலும் பலப்படுத்துவதற்கு துணை அணி அல்லது பி அணி அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
'இலங்கை கிரிக்கெட் அணியைப் பலப்படுத்துவதற்கு துணை அணி அல்லது பி அணி ஒன்று அவசியம். கடந்த காலங்களில் அது இல்லாததால் பெரும் குறையாக இருந்தது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் நடத்தவுள்ள தேசிய சுப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் பிரகாசிக்கும் வீரர்களை துணை அணியில் இணைப்பது அவசியம். அவ்வாறான வீரர்களைத் தேர்வு செய்வதே தெரிவாளர்களாகிய எங்களது பிரதான கடமை' என உப்புல் தரங்க குறிப்பிட்டார்.
இலங்கை கிரிக்கெட்டைப் பொறுத்தமட்டில் தெரிவாளர்கள் வருவதும் போவதுமாக இருக்கின்றனர். ஆனால், தேர்வுக்கென நிரந்தரமான கொள்கை இல்லை. வீரர்களைத் தெரிவு செய்தவற்கு நிரந்தர கொள்கை அவசியம் என கருதுகிறீர்களா என உப்புல் தரங்கவிடம் கேட்டபோது,
'நாங்கள் ஒரு கொள்கையுடனேயே தெரிவுகளில் ஈடுபடுகிறோம். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பிரகாசிக்கும் வீரர்கள் தெரிவு செய்யப்படுவது அவசியம். அத்துடன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பக்கசார்பாக செயல்படும் நோக்கம் எங்களுக்கு இல்லை. எங்களது காலத்திற்கு பின்னர் பொறுப்பேற்கும் தேர்வாளர்கள் எப்படி செயற்படுவார்கள் என எம்மால் கூறமுடியாது. ஆனால், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம், விளையாட்டுத்துறை அமைச்சு என்பன இணைந்து தேர்வுக்கென ஒரு கொள்கைத் திட்டத்தை வகுப்பது வரவேற்கத்தக்கது' என பதிலளித்தார்.
மூவகை சர்வதேச கிரிக்கெட் அணிகளுக்கு வெவ்வேறு அணித் தலைவர்களை நியமித்தது சரியா என கேட்டதற்கு,
'மூவகை சர்வதேச கிரிக்கெட் அணிகளுக்கும் ஒரே அணித் தலைவர் இருக்க வேண்டும் என்பதைத் தான் நாங்கள் விரும்புகிறோம். ஆனால், அது அணித் தலைவருக்கு பெருஞ்சுமையாக அமையும் என்பதாலேயே அணித் தலைமைகளைப் பகிர்ந்து கொடுத்துள்ளோம். ஒரு நாள் அணிக்கு குசல் மெண்டிஸும் ரி20 அணிக்கு வனிந்து ஹசரங்கவும் டெஸ்ட் அணிக்கு தனஞ்சய டி சில்வாவும் அணித் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்' என்றார்.
ஸிம்பாப்வேக்கு எதிராக எதிர்வரும் 6ஆம், 8ஆம், 11ஆம் திகதிகளில் ஆர். பிரேமதாச அரங்கில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும்.
இந்தத் தொடருக்கான இலங்கை குழாம்
குசல் மெண்டிஸ் (தலைவர்), சரித் அசலன்க (உதவித் தலைவர்), பெத்தும் நிஸ்ஸன்க, அவிஷ்க பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, சஹன் ஆராச்சிகே, நுவனிது பெர்னாண்டோ, தசுன் ஷானக்க, ஜனித் லியனகே, மஹீஷ் தீக்ஷன, டில்ஷான் மதுஷன்க, துஷ்மன்த சமீர, துனித் வெல்லாலகே, ப்ரமோத் மதுஷான், ஜெவ்றி வெண்டசே, அக்கில தனஞ்சய, வனிந்து ஹசரங்க (உடற் தகுதியைப் பொறுத்து).