Paristamil Navigation Paristamil advert login

ஐ.சி.சி. விருதுகளுக்கு   பரிந்துரைக்கப்பட்ட இலங்கை வீரர்கள்...

ஐ.சி.சி. விருதுகளுக்கு   பரிந்துரைக்கப்பட்ட இலங்கை வீரர்கள்...

4 தை 2024 வியாழன் 07:19 | பார்வைகள் : 1260


சர்வதேச கிரிக்கெட் பேரவையின் 2023ஆம் ஆண்டுக்கான விருதுகளுக்கு இலங்கையின் டில்ஷான் மதுஷன்க, சமரி அத்தப்பத்து ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் (ஐசிசி) புதன்கிழமை (03) அறிவிக்கப்பட்ட ஐசிசி விருதுகளுக்கான நான்கு தொகுதிகளில் இரண்டிலேயே இலங்கையர்கள் இருவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

2023க்கான ஐசிசி அதிசிறந்த சர்வதேச ரி20 கிரிக்கெட் வீரர், ஐசிசி அதிசிறந்த சர்வதேச ரி20 கிரிக்கெட் வீராங்கனை, ஐசிசி வளர்ந்துவரும் வீரர், வீராங்கனை ஆகிய நான்கு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள எட்டு வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் வரிசையில் இலங்கையின் டில்ஷான் மதுஷன்க, சமரி அத்தப்பத்து ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

2023இல் நடைபெற்ற சர்வதேச ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் வீர, வீராங்கனைகள் வெளிப்படுத்திய ஆற்றல்களை அடிப்படையாகக் கொண்டு சிறந்த வீரர்களின் பெயர்கள் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஆடவர் கிரிக்கெட் போட்டியில் வளர்ந்துவரும் வீரருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ஐவரில் டில்ஷான் மதுஷன்கவும் இடம்பெறுகிறார்.

அத்துடன் 2022 வெற்றியாளர் மாக்கோ ஜென்சன் (தென் ஆபிரிக்கா), அவரது சக வீரர் ஜெரால்ட் கோட்ஸீ, யஷஸ்வி ஜய்ஸ்வால் (இந்தியா), ரச்சின் ரவிந்த்ர (நியூஸிலாந்து) ஆகியோரின் பெயர்களும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த வருடம் நடைபெற்ற ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட்டில் டில்ஷான் மதுஷன்க 9 போட்டிகளில் 21 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தார். அத்துடன் கடந்த வருடம் மொத்தமாக 15 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 31 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதேவேளை, வருடத்தின் அதிசிறந்த ரி20 கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதுக்கு இலங்கை அணித் தலைவி சமரி அத்தப்பத்து பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த வருடம் துடுப்பாட்டத்தில் சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்தியிருந்தார்.

எனினும் 2017, 2019 ஆகிய வருடங்களில் அதிசிறந்த ரி20 கிரிக்கெட் வீராங்கனைக்கான ஐசிசி விருதை வென்றெடுத்த எலிஸ் பெரி (அவுஸ்திரேலியா), ஹெய்லி மெத்யூஸ் (மேற்கிந்தியத் தீவுகள்), சொஃபி எக்லஸ்டோன் (இங்கிலாந்து) ஆகியோரின் பெயர்களும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, வருடத்தின் அதிசிறந்த ரி20 கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருதுக்கு இந்தியாவின் சூரியகுமார் யாதவ், நியூஸிலாந்தின் மார்க் சப்மன், ஸிம்பாப்வேயின் சிக்கந்தர் ராஸா, உகண்டாவின் அல்பேஷ் ராம்ஜானி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சூரியகுமார் யாதவ் கடந்த வருடம் இந்த விருதை வென்றெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வளர்ந்துவரும் சர்வதேச கிரிக்கெட் வீராங்கனைக்கான ஐசிசி விருதுக்கு மாறுபா அக்தர் (பங்களாதேஷ்), லோரென் பெல் (இங்கிலாந்து), டார்சி காட்டர் (ஸ்கொட்லாந்து), ஃபோப் லிச்ஃபீல்ட் (அவுஸ்திரேலியா) ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள வீர, வீராங்கனைகளில் தங்களுக்கு விருப்பமானவர்களுக்கு கிரிக்கெட் இரசிகர்கள்  www.icc-cricket.com என்ற இணையத்தளத்தின் ஊடாக தங்களது வாக்குகளை அளிக்க முடியும்.

இந்த விருதுகளைவிட டெஸ்ட் கிரிக்கெட், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் ஆகியவற்றுக்கான விருதுகள், வருடத்தின் அதிசிறந்த (ஒட்டுமொத்த) கிரிக்கெட் வீரர், கிரிக்கெட் வீராங்கனை ஆகிய விருதுகளும் வழங்கப்படவுள்ளன.

அந்த விருதுகளுக்கான பரிந்துரைகளை ஐசிசி விரைவில் வெளியிடும். 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்