மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கும் நிதி எவ்வளவு? : நிர்மலா சீதாராமன்
4 தை 2024 வியாழன் 13:14 | பார்வைகள் : 1957
2014-2023 காலகட்டத்தில் தமிழகத்திடம் இருந்து மத்திய அரசு ரூ.6.23 லட்சம் கோடி வரியாக பெற்றது. பெற்ற வரியை விட கூடுதலாக தமிழகத்திற்கு ரூ.6.69 லட்சம் கோடி நிதி வழங்கியுள்ளோம் என நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை மேற்கு மாம்பலத்தில் வங்கிகள் மூலம் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: எந்த விதமான உதவிகளும் தமிழக அரசுக்கு மத்திய அரசு செய்வதில்லை என பரப்புரை இருந்து வருகிறது. ஆனால் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்துள்ளது. தமிழகத்தின் மீது விரோத மனப்பான்மையுடன், நாங்கள் வரி பணத்தை திருப்பி கொடுக்காமல் வைத்து கொள்ளவில்லை.
கூடுதலாக நிதி
2014-2023 வரை தமிழகத்திடம் மத்திய அரசு பெற்ற வரி ரூ.6.23 லட்சம் கோடி. தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கிய நிதி ரூ.6.96 லட்சம் கோடி. தமிழகத்திடம் இருந்து பெற்ற வரியை விட கூடுதலாக நிதி கொடுத்துள்ளோம். தமிழகம், கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலத்திற்கும் மாதம் தோறும் நிதி கொடுத்து வருகிறோம். தமிழகத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கு 37 ஆயிரத்து 965 கோடி ரூபாய் கொடுத்துள்ளோம். அதேபோல் பள்ளிக்கூடங்கள் கட்டுவதற்காக, 11 ஆயிரத்தி 116 கோடி ரூபாயும், கிராமப்புரத்தில் வீடுகள் கட்டுவதற்காக, 4ஆயிரத்து 836 கோடி ரூபாயும் கொடுத்துள்ளோம்.
முன்கூட்டியே நிதி
மாதம் தோறும் அனைத்து மாநிலங்களுக்கும் போக வேண்டிய பணம் சரியாக போய்விடுகிறது. அதை தவிர, சில மாதங்களில் அடுத்த மாதங்கள் கொடுக்க வேண்டிய பணம் முன்கூட்டியே கொடுக்கப்படுகிறது. தீபாவளிக்கு செலவு இருக்குமே, பொங்கலுக்கு செலவு இருக்குமே என்று முன்கூட்டியே கொடுக்கிறோம்.
ஜிஎஸ்டி வரி
தமிழகத்தில் இருந்து ஜி.எஸ்டி வரியாக 36ஆயிரத்தி 350 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் 37 ஆயிரத்தி 370 கோடி ரூபாய் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரியை முழுமையாக மாநில அரசுகளுக்கு தான் கொடுத்துள்ளோம். பாகுபாடு இல்லாமல் திட்டம் அனைவருக்கும் கொண்டு செல்லப்படுகிறது. தமிழகத்திற்கு கூடுதலாக நிதி கொடுத்துள்ளோம். வரி தொடர்பாக இன்னும் கேள்வி கேட்டாலும் பதில் அளிக்க தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
பெண் கேள்வி; நிர்மலா சீதாராமன் பதில்
நிர்மலா சீதாராமன் பேசி முடித்த பின், பெண் ஒருவர் தனக்கு நிவாரண நிதி கிடைக்கவில்லை என கேள்வி எழுப்பினார். அதற்கு, கிடைக்கும். உங்கள் விபரங்களை தெரிவியுங்கள். உங்கள் கஷ்டம் தெரிகிறது. உங்கள் விபரத்தை கொடுங்க, எதற்கு நிதி வரவில்லை என பார்ப்போம் என பதில் அளித்தார்.