செந்தில் பாலாஜி வழக்கு: 900 பேருக்கு தொடர்பு?
4 தை 2024 வியாழன் 13:56 | பார்வைகள் : 1581
போக்குவரத்து துறையில் பணி நியமனம் பெற்று தருவதாக, பணம் பெற்று ஏமாற்றியதாக, அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில், கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையில், 900 பேர் வரை, குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில், 2011 - 16ம் ஆண்டு போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தார். போக்குவரத்துத் துறையில் பணி நியமனம் பெற்று தருவதாக, பணம் பெற்று மோசடி செய்ததாக, அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் உள்ளிட்டோருக்கு எதிராக, சி.பி.சி.ஐ.டி., நான்கு வழக்குகள் பதிவு செய்தது. அதில் ஒரு வழக்கை, உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மற்ற வழக்குகளில் புதிதாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், புதிதாக விசாரணை நடத்த உத்தரவிட்டதை ரத்து செய்து, அனைத்து வழக்குகளிலும் விசாரணையை முடித்து, இரண்டு மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, இந்த வழக்கில், கடந்த ஆண்டு செப்டம்பரில் சென்னையில் உள்ள எம்.பி., - எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
900 பேர்?
மோசடியில் ஈடுபட்டதாக, போக்குவரத்து துறை ஊழியர்கள், அதிகாரிகள், முகவர்கள் உள்பட 900 பேர் வரை, சம்பந்தப்பட்டு உள்ளதாகவும், அவர்களின் பெயர் கூடுதல் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயவேல் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக, வழக்கை தொடர சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து அனுமதி, ஒப்புதல் கடிதம் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மோசடியில் தொடர்புடைய மற்றவர்களையும் வழக்கில் சேர்க்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. குறைந்த மதிப்பெண் பெற்று, பணியில் சேர்ந்துள்ளோம் என்ற காரணத்துக்காக, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளோம். பணம் கொடுத்து பணியை பெறவில்லை.
வழக்கு விசாரணைக்கு ஒவ்வொரு முறையும் ஆஜராக, பணி விடுப்பு எடுத்து வருவதால், ஊதிய இழப்பு ஏற்படுகிறது. எனவே, விசாரணைக்கு ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என, குற்றம் சாட்டப்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, 'இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோரை விசாரிக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதி மற்றும் ஒப்புதல் கடிதம் பெறும் நடவடிக்கையில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்த தற்போதைய நிலை என்ன என்பது குறித்து, மத்திய குற்றப்பிரிவின் விசாரணை அதிகாரி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணைக்கு ஆஜராகுவதில் இருந்து, விலக்கு அளிக்க முடியாது. அது தொடர்பாக தனியாக மனு தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஜெயவேல், விசாரணையை, பிப்., 2 தேதிக்கு தள்ளி வைத்தார்.
நான் ஒரு அப்பாவி': ஜாமின் கேட்டு மீண்டும் மனு
ஜாமின் கேட்டு, ஏற்கனவே செந்தில் பாலாஜி தாக்கல் செய்த இரண்டு மனுக்களை, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தன. உச்சநீதிமன்றம், மருத்துவ காரணங்கள் அடிப்படையில், ஜாமின் வழங்க முடியாது; கீழமை நீதிமன்றத்தை நாடும்படி தெரிவித்ததை அடுத்து, அந்த மனு வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில், ஜாமின் கேட்டு, முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில், செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் என்.பரணிகுமார் மனு தாக்கல் செய்துள்ளார். மனு விபரம்: கைதாகி, 180 நாட்களுக்கு மேலாக, சிறையில் உள்ளேன். நோய் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக தான் குணமாகி வருகிறது. இதய பிரச்னையால் அவதிப்பட்டு வருகிறேன். அடிக்கடி காலில் உணர்வின்மை ஏற்படுகிறது. இதற்கு சிகிச்சை தேவை. இடது காலிலும் பாதிப்பு உள்ளது. நீண்ட நேரம் நிற்கவோ, அமரவோ கூடாது என டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
வழக்கில் சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையால் கைப்பற்றப்பட்ட ஆவணங்களும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சாட்சிகளை கலைக்க, எந்த வாய்ப்பும் இல்லை. நான் அல்லது என் குடும்பத்தினர் சாட்சிகளை மிரட்டியதாகவோ அல்லது அவர்களுக்கு நிர்ப்பந்தம் கொடுத்ததாகவோ, இதுவரை எந்த புகாரும் இல்லை. வழக்கில் கூடுதல் விசாரணை தேவை என அமலாக்கத்துறை கோரவில்லை. நான் ஒரு அப்பாவி; சட்டத்தை மதித்து நடப்பவன். நீதிமன்ற நிபந்தனைகளை பின்பற்ற தயாராக உள்ளேன். எனவே, ஜாமின் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.அல்லி, மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை, வரும் 8ம் தேதிக்கு தள்ளி வைத்தார். ஏற்கனவே, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல், 13வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காவல் நீட்டிப்பு
அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜனவரி 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காணொலி காட்சி மூலமாக புழல் சிறையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்ட போது 14வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.