பா-து-கலே வெள்ளம்! - துணை நகர முதல்வர் மீது தாக்குதல் - 371 பேர் வெளியேற்றம்!!
4 தை 2024 வியாழன் 18:30 | பார்வைகள் : 2517
கடந்த இரண்டு நாட்களாக பா-து-கலே மாவட்டத்துக்கு வெள்ளம் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வியாழக்கிழமை இரவு மீண்டும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 4 மணி அளவில் Météo-France இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. பா-து-கலே மாவட்டம் மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. 438 தொலைபேசி அழைப்புகள் உதவிக்குழுவுக்கு கிடைத்துள்ளன. மொத்தமாக 371 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பா-து-கலேயின் Blendecques நகர துணை முதல்வர், நேற்று இரவு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியினை பார்வையிடச் சென்றிருந்த போது, நபர் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டுமாதங்களாக அப்பகுதி வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு மெத்தனம் காட்டுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
பா-து-கலே மாவட்டம் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத பாதிப்பு ஒன்றை இம்முறை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 1982 ஆம் ஆண்டு மிகப்பெரிய வெள்ள அனர்த்தம் ஒன்றை அம்மாவட்டம் சந்தித்திருந்தது.
வெள்ளம் காரணமாக கடந்த பல நாட்களாக வியாபாரங்கள், உணவக தொழிலகள் மற்றும் சுற்றுலாத்துறை, விடுதிகள், தங்குமிடங்கள் போன்றவை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.