இலங்கை முழுவதும் டெங்கு நோய் அபாயம் - பொது மக்களுக்கு எச்சரிக்கை
5 தை 2024 வெள்ளி 03:47 | பார்வைகள் : 1809
நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் விசேட டெங்கு ஒழிப்பு வாரத்தை பிரகடனப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
தற்போதுள்ள டெங்கு அபாயத்தை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, ஆரம்பகட்ட கலந்துரையாடலொன்று சுகாதார அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபால தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கலந்துரையாடலுக்கு அமைய டெங்கு ஒழிப்பு குழுக்களை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாடளாவிய ரீதியில் அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களையும் உள்ளடக்கி விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2023 ஆம் ஆண்டில் 88,398 டெங்கு நோயாளர்கள் மற்றும் 58 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
இதனிடையே, 71 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிக ஆபத்துள்ள வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், பதிவாகும் டெங்கு நோயாளர்களை விட அதிகமானோர் சமூகத்தில் இருக்கலாம் என டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.