ஜனாதிபதியை சந்திக்க அனுமதிகோரிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கைது
5 தை 2024 வெள்ளி 08:11 | பார்வைகள் : 2937
வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாட அனுமதி கோரிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் தலைவி உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வடக்கிற்கு நான்கு நாள் பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று வவுனியாவிற்கு விஜயம் செய்திருந்ததுடன் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற வன்னி மாவட்டங்களிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.
இந்நிலையில் ஜனாதிபதியினை சந்திக்க வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் முற்பட்டனர். இவர்களை தடுத்துநிறுத்திய பொலிஸார் ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தனர்.
இதனையடுத்து ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கோரி வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதனைதொடர்ந்து பொலிஸாரும் போராட்டக்காரர்களுக்கும் ஏற்பட்ட முரன்பாட்டை தொடர்ந்து குறித்த பகுதியில் பதட்டநிலை ஏற்பட்டது.
மேலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா உட்பட்ட இருவரை பொலிஸார் கைது செய்தனர்.
கைதுசெய்யப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா உட்பட்ட குழுவினருக்கு இன்றையதினம் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு நீதவான் நீதிமன்றம் தடை விதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.