இலங்கையில் வரி பதிவு இலக்கத்தை பெற ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பதிவு
5 தை 2024 வெள்ளி 11:11 | பார்வைகள் : 3043
உள்நாட்டு இறைவரி திணைக்களம் (IRD) 2023ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வரி பதிவுகளை தன்னார்வ மற்றும் பிற பதிவுகள் மூலம் கண்டுள்ளது.
நாட்டில் 5 மில்லியன் உயர் வருமானம் ஈட்டுபவர்களை அடையாளம் காண உள்நாட்டு இறைவரி திணைக்களம் முற்படுவதாக திணைக்களத்தின் சிரேஷ்ட ஆணையாளர் நாயகம் கீர்த்தி நாபான தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 437,547 ஆக இருந்த வரி பதிவுகளின் எண்ணிக்கை இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் 20 வீதத்துக்கும் அதிகமானவர்கள் வருமானம் ஈட்டுபவர்களாக உள்ளனர். நாட்டின் மொத்த மக்கள் தொகை ஈட்டும் வருமானத்தில் 60 வீதத்துக்கும் அதிகமான வருமானத்தை இவர்கள் ஈட்டுகின்றனர். அதனால் "எங்கள் முதல் பணி அதிக வருமானம் ஈட்டும் 5 மில்லியன் பேரை அடையாளம் காண்பதாகும்," என்றும் அவர் கூறினார்.
இந்த 5 மில்லியன் பேர் தொழில்முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்கள் என 14 வகைகளில் பிரிக்கப்பட்டுள்ளனர். 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களும் பெப்ரவரி 1ஆம் திகதிக்கு முன்னர் வரி பதிவு இலக்கத்தை பெற சலுகை காலம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், ஆட்கள் பதிவுத் திணைக்களம் மற்றும் நிறுவனப் பதிவாளர் ஆகிய திணைக்களங்கள் இறைவரி நிர்வாக முகாமைத்துவத் தகவல் அமைப்புடன் (RAMIS) இணைந்துள்ளன. சுங்கத் திணைக்களமும் 100 வீதம் இறைவரி திணைக்களத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கீர்த்தி நாபான கூறினார்.
தனியார் வங்கிகளுடன் இறைவரி நிர்வாக கட்டமைப்பை இணைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், ஆனால் தனியார் துறைக்கு செல்வதற்கு முன் அனைத்து அரசு நிறுவனங்களையும் முதல் கட்டமாக கணினியுடன் இணைக்க இறைவரி திணைக்களம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.