விஜயகாந்த் நினைவிடத்தில் கண்கலங்கிய சூர்யா!
5 தை 2024 வெள்ளி 13:47 | பார்வைகள் : 2648
கேப்டன் விஜயகாந்த் கடந்த வாரம் காலமான நிலையில் இன்று நடிகர் சூர்யா அவருடைய நினைவிடத்திற்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தி தேம்பி தேம்பி அழுதார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
விஜயகாந்த் அவர்களின் மறைவு தாங்க முடியாதது, மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஆரம்ப காலத்தில் நான் நான்கு ஐந்து படங்கள் நடித்திருந்த போது பெரிய அளவில் எனக்கு பாராட்டுக்கள் கிடைக்கவில்லை, அதன்பின் ‘பெரியண்ணா’ படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது
இந்த படத்திற்காக 8 முதல் 10 நாள் வரை அவருடன் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒவ்வொரு நாளும் அவர் என்னை ஒரு சகோதரர் போல கருதினார். முதல் நாளே என்னிடம் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடலாம் என்று கூறினார்.
அப்பாவின் உடல் நலத்திற்காக வேண்டுதல் செய்து நான் அசைவம் சாப்பிட மாட்டேன் என்றும் கூறினேன். அப்போது அவர் என்னிடம் நீ ஏன் வெஜிடேரியன் மட்டும் சாப்பிடுகிறாய்? நீ நன்றாக உழைக்க வேண்டும், அதற்கு அசைவம் சாப்பிட வேண்டும் என்று அவருடைய தட்டில் இருந்த கறியை எடுத்து என்னுடைய தட்டில் வைத்து சாப்பிட வைத்தார். கடினமாக உழைப்பதற்கு உடம்பில் சக்தி வேண்டும், வேறு ஏதாவது அப்பாவுக்காக வேண்டிக்கொள் என்று என்னை கட்டாயப்படுத்தி எனக்கு கறியை ஊட்டி விட்டார்.
ஒவ்வொரு நாளும் என்னை மிகுந்த கவனமாக பார்த்துக் கொண்டார். அந்த 8 நாளும் நான் அவரை பிரமித்து பார்த்தேன். பொதுவாக உச்ச நட்சத்திரங்கள் என்றால் விலகி இருப்பார்கள், ஆனால் விஜயகாந்த் எல்லாரையும் பக்கத்தில் வைத்துக் கொள்வார். எப்போது வேண்டுமானாலும் அவரிடம் பேசலாம், அவரை அணுகுவது எளிது .
மலேசிய சிங்கப்பூர் சென்ற போது ஒவ்வொரு நாளும் அவருடைய துணிச்சலை, ஆளுமையை பார்த்து நான் அசந்து போய் இருக்கிறேன். அவரை மறுபடியும் சந்தித்து பேச வேண்டும் என்ற ஆசை இருந்தது ஆனால் அது நிறைவேறாமல் போய்விட்டது. அவரை போல் இன்னொருவர் கிடையாது. அவரை கடைசியாக ஒரு முறை பார்க்க முடியவில்லை என்பது எனக்கு மிகப்பெரிய மனக்குறை’ என்று கூறினார்.