அங்கித் திவாரியை காவலில் எடுக்க அமலாக்கத்துறை மனு: விசாரணை ஒத்திவைப்பு
5 தை 2024 வெள்ளி 15:27 | பார்வைகள் : 2143
திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ்பாபுவிடம் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கி கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை விசாரிக்க அமலாக்கத்துறை திண்டுக்கல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை ஜன.9க்கு ஒத்திவைத்து முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.
திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ்பாபு, இவரை சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுவிப்பதாக கூறி மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த டிச.,1ல் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து கூடுதல் விசாரணை மேற்கொள்ள அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரித்து மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
நீதிமன்ற காவலும் 2 முறையாக நீட்டிக்கப்பட்டது. ஜாமின் கேட்டும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் அங்கித் திவாரி மீது அமலாக்கத்துறையும் சமீபத்தில் வழக்கு பதிவு செய்தது. அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கித் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க திண்டுக்கல் நீதின்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இவ்வழக்கு நடக்கும் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் விடுப்பில் இருந்ததால் பொறுப்பிலிருந்த முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அமலாக்கத்துறை தரப்பில் அங்கித்திவாரியை, விசாரிக்க எங்களுக்கும் அதிகாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மனுவை விசாரித்த முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் பிரியா, ஜன.,9ம் தேதிக்கு இதன் விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.