Paristamil Navigation Paristamil advert login

திமுக அரசால் தமிழக நிதி நிலை மோசம்: அண்ணாமலை குற்றச்சாட்டு

திமுக அரசால் தமிழக நிதி நிலை மோசம்: அண்ணாமலை குற்றச்சாட்டு

5 தை 2024 வெள்ளி 16:56 | பார்வைகள் : 1350


திமுக அரசு தொடர்ந்து கடன் வாங்கிக் கொண்டிருப்பதால்தான் தமிழகத்தின் நிதிநிலை மோசமாகிக் கொண்டிருப்பதாக பாஜ மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

ஓய்வு பெற்ற போலீசார் பா.ஜ.,வில் இணையும் நிகழ்ச்சி சேலத்தில் நடந்தது. இதில் 61 பேர், குடும்பத்துடன் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தனர்.

பிறகு நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: பொங்கல் தொகுப்புடன் சேர்த்து ரூ.ஆயிரம் வழங்குவதாக திமுக அரசு அறிவித்துள்ளது. இதற்கு நிதிநிலையை காரணமாக காட்டியுள்ளது. இதே முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போது ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு இப்போது ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார். 

இதற்கு நிதி நிலை சீராக இல்லை என்று காரணம் சொல்கிறார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த கடந்த 31 மாதங்களில் மட்டும் திமுக அரசு 2.69 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் தொகை இதனால் 8.23 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில் 40 சதவீத தொகை திமுக ஆட்சியில் மட்டுமே வாங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்த திமுக அரசிடம் எந்தவித திட்டமும் இல்லை. பொருளாதாரத்தை சரி செய்யாமல் வெறுமனே பஞ்சப்பாட்டு பாடுவதே திமுக.,வினரின் செயலாக உள்ளது. 

தமிழகத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக எந்த நடவடிக்கையும் திமுக எடுக்கவில்லை. இதனால் தமிழகத்தின் நிதி நிலை அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. இதே வேகத்தில் சென்றால் தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் தொகை அடுத்த 2 வருடங்களில் 10 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து விடும்.

இந்திய அளவில் மிகக் குறைவான அன்னிய முதலீடு தமிழகத்திற்குத்தான் வந்துள்ளது. முதல்வர் துபாய்க்கு சென்று வந்த பிறகு 6 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடே இன்னும் வரவில்லை. இதில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி 5 லட்சம் கோடி ருபாய் முதலீடு வரும் என்பதை ஏற்க முடியாது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் என்னை விசாரணைக்கு அழைத்தால் சந்திக்கத் தயார். இன்னும் பல ஆவணங்கள் என்னிடம் உள்ளன. 

அரசியல் கட்சித் தலைவர் என்ற முறையில் என்னுடைய கவனத்திற்கு வரும் அனைத்து முறைகேடுகளையும் மக்கள் முன்பு வைப்பதே என் வேலை. ஏற்கனவே, கோவையில் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தின்போது, அது பயங்கரவாத செயல் என்பதற்கான ஆவணத்தை நான் வெளியிட்டேன். தவறை வெளிப்படுத்துவதற்காக திமுக அரசு நடவடிக்கை எடுத்தால் அதை சந்திக்கத் தயாராக உள்ளேன்

லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக மத்திய குழு கூடி முடிவெடுத்து அறிவிப்பார்கள். என்னைப் பொறுத்தவரை பிரதமர் மோடியின் தலைமையை ஏற்று யார் வந்தாலும் இருகரம் கூப்பி நான் வரவேற்பேன். சேலம் மாவட்டத்தில் என் மண் என் மக்கள் யாத்திரைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்