கடைசி டெஸ்டிலும் அரைசதம் விளாசிய வார்னர்...!
6 தை 2024 சனி 08:55 | பார்வைகள் : 2011
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா கைப்பற்றியது.
சிட்னியில் நடந்த கடைசி டெஸ்டில், மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 68 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
அத்துடன் 82 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து இன்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது.
அணியின் ஸ்கோர் 109 ஆக உயர்ந்தபோது, விக்கெட் கீப்பர் முகம்மது ரிஸ்வான் 28 ஓட்டங்களில் லயன் ஓவரில் அவுட் ஆனார்.
அதன் பின்னர் ஆமீர் ஜமால் 18 ஓட்டங்களிலும், ஹசன் அலி 5 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் 115 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் அவுஸ்திரேலிய அணிக்கு 130 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அடுத்து களமிறங்கிய அவுஸ்திரேலியா முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தது. கவாஜா ரன் எடுக்காமல் சாஜித் கான் ஓவரில் அவுட் ஆனார்.
எனினும், டேவிட் வார்னர் மற்றும் லபுசாக்னே அதிரடியாக பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.
இதன்மூலம் அவுஸ்திரேலியா 25.5 ஓவரிலேயே 130 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. டேவிட் வார்னர் 57 (75) ஓட்டங்களும், லபுசாக்னே 62 (73) ஓட்டங்களும் எடுத்தனர்.
தனது கடைசி டெஸ்டிலும் வார்னர் அரைசதம் விளாசியது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியுடன் டேவிட் வார்னர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
அவர் 112 டெஸ்ட் போட்டிகளில் 8786 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 26 சதங்கள் மற்றும் 37 அரை சதங்கள் அடங்கும். மேலும், ஒரே இன்னிங்சில் 335 ரன்கள் எடுத்துள்ளார்.