மருத்துவரை போல் செயல்படும் ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச்..!
6 தை 2024 சனி 12:07 | பார்வைகள் : 1725
உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் வகையில் ஸ்மார்ட்வாட்ச்களில் பல மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன.
குறிப்பாக, ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச்கள் உடலியல் மாற்றங்களை கணித்து, தங்கள் பயனர்களுக்கு அது சம்பந்தமான தகவல்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பலதரப்பட்ட வல்லுநர்கள் ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச்சுகளை பயனர்களுக்கு உடல் ஆரோக்கியம் தொடர்பில் பரிந்துரைக்கின்றனர். இதற்கு காரணம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள சென்சார்களின் தரம் தான்.
இந்த நிலையில், ஆப்பிள் பல புதிய சேவைகளை அறிமுகம் செய்ய முனைந்துள்ளது. இதற்காக பல சோதனைகளை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது அதிகப்படியான ரத்த அழுத்தம், தூக்கத்தில் மூச்சுத் திணறல் போன்றவற்றை அறிந்து, உடனடியாக மருத்துவ உதவியை நாடும் வகையில் இந்த சோதனைகள் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
எனவே இந்த சேவையை ஆப்பிள் அறிமுகம் செய்யும்போது, தலைசிறந்த ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்பை வழங்கும் முதல் நிறுவனமாக ஆப்பிள் விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024-யில் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய ஆப்பிள் வாட்ச் 10 சீரிஸில் பல அம்சங்கள் உள்ளதாக தொழில்நுட்ப வல்லுநரான குர்மன் தெரிவித்துள்ளார்.
ஆனால், பெரிதாக புதிய அம்சங்கள் எதுவும் இந்த மொடலில் சேர்க்கப்படவில்லை என்பதால், பழைய தயாரிப்புகளிலேயே மக்கள் தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 ஸ்மார்ட்வாட்சின் 41 மிமீ பதிப்பு அலுமினியம் கட்டமைப்பு கொண்டது. இது இந்தியாவில் 41,500 ரூபாய் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் 45 மிமீ பதிப்பு ரூ.44,900 என்ற விலையில் விற்பனையாகிறது. மேலும் Stainless steel கட்டமைப்பு கொண்ட 41 மிமீ பதிப்பு ரூ.70,900 என்ற விலையிலும், 45 மிமீ பதிப்பு ரூ.75,900 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
அதிகபட்சமாக இவற்றின் மேம்பட்ட பதிப்பான 'ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2' ரூ.89,900 என்ற பாரிய விலைக்கு விற்பனை பட்டியலில் உள்ளது.
வாட்ச் சீரிஸ் 9 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2-யின் சிறப்பம்சங்கள்
இந்த மொடல், பயனரின் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவைக் கண்காணிக்கும்
உடல் வெப்ப விகிதத்தை அளவிடும்
ஒழுங்கற்ற இதயத் துடிப்பை அறிந்து கொள்ள உதவும்
ECG மானிட்டராக இது செயல்படும்
இந்த இரண்டு வாட்ச்களும் s9 SiP சிப்செட்களால் இயக்கப்படுகின்றன. இவற்றில் இருக்கும் புதிய அம்சம் என்னவென்றால், பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரலை சேர்த்து இரண்டு முறை அழுத்தினால் Calls, Timer, Alarm போன்றவற்றை கட்டுப்படுத்தலாம்.
இந்த சிறப்பம்சங்களை கொண்டுள்ளதால் இரண்டு ஸ்மார்ட் வாட்ச்களும் கிட்டத்தட்ட ஒரு மினி மருத்துவர் போல் தான்.
வாட்ச் சீரிஸ் 9 மொடல்களை முதல் கார்பன்-நியூட்ரல் தயாரிப்பு என ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது.