முல்லைத்தீவு கிணற்றிலிருந்து வெளியேறும் மண்ணெண்ணையால் மக்கள் அச்சம்
8 தை 2024 திங்கள் 03:16 | பார்வைகள் : 2149
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு குரவில் கிராமத்தில் கிணற்றுக்குள் இருந்து கிணற்று நீருடன் மண்ணெண்ணைய் வெளியேறி வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குரவில் கிராமத்தில் வசிக்கும் குடும்பம் ஒன்று கடந்த மழை வெள்ளத்தினால் கிணறு வெள்ளநீரில் நிரம்பிய நிலையில் கிணற்றினை சுத்தம் செய்வதற்காக இன்று கிணற்றினை நீர் இறைக்கும் இயந்திரம் கொண்டு இறைத்துள்ளார்கள்.
இதன்போது கிணற்று நீருடன் மண்ணெண்ணை கலந்து கொண்டிருப்பது கண்டறியப்பபட்டுள்ளதுடன் இந்த சம்பவம் கிராமத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் காணி உரிமையாளர்களை கேட்டபோது 2012 ஆம் ஆண்டு மீள்குடியேறிய பின்னர் 23 அடி ஆழம் கொண்ட குறித்த கிணறு தோண்டப்பட்டுள்ளது.
கிணற்றினை சுத்தம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோது, முதல் கருநிறத்தில் காணப்பட்ட கிணற்று நீர், பின்னர் நிறம் மாறியிருந்ததுடன் மண்ணெண்ணைய் மணக்கத்தொடங்கியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் வாளியால் தண்ணீரை அள்ளி அதில் ஒரு இலையினை நனைத்து அதனை பற்றவைத்தபோது அந்த இலை எரிந்துள்ளது.