Paristamil Navigation Paristamil advert login

இந்திய டி20 குழாத்தில் மீண்டும் ரோஹித், கோஹ்லி

இந்திய டி20 குழாத்தில் மீண்டும் ரோஹித், கோஹ்லி

8 தை 2024 திங்கள் 08:31 | பார்வைகள் : 1966


இந்தியாவின் ரி20 கிரிக்கெட் குழாத்தில் ரோஹித் ஷர்மாவும் விராத் கோஹ்லியும் மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை முன்னிட்டு 16 வீரர்களைக் கொண்ட குழாத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஞாயிற்றுக்கிழமை (07) வெளியிட்டது.

அவுஸ்திரேலியாவில் 2022இல் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்குப் பின்னர் இப்போதுதான் ரி20 குழாத்தில் ரோஹித் ஷர்மாவும் விராத் கோஹ்லியும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிராக அடிலெய்டில் 2022 நவம்பர் 10ஆம் திகதி நடைபெற்ற ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியிலேயே அவர்கள் இருவரும் கடைசியாக விளையாடியிருந்தனர்

ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் இந்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணியைப் பலப்படுத்தும் பொருட்டு அவர்கள் இருவரும் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்திய ரி20 அணியின் தலைவராக ரோஹித் ஷர்மா செயற்படுவார். சஞ்சு செம்சன், ஜிட்டேஷ் ஷர்மா ஆகிய இருவரும் விக்கெட் காப்பாளர்கள் ஆவர்.

தென் ஆபிரிக்காவுக்கு எதிரான ரி20 தொடரில் அணியின் உதவித் தலைவராக இடம்பெற்ற ரவிந்த்ர ஜடேஜா தற்போதைய குழாத்தில் இடம்பெறவில்லை.

எனினும் ஷிவம் டுபே, வொஷிங்டன் சுந்தர், அக்சார் பட்டேல் ஆகிய சகலதுறை வீரர்கள் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர்.

ரோஹித் ஷர்மா, விராத் கோஹ்லி ஆகியோருடன் ஷுப்மான் கில், ரின்கு சிங், யஷஸ்வி ஜய்ஸ்வால், திலக் வர்மா ஆகியோர் துடுப்பாட்ட வீரர்களாக குழாத்தில் இடம்பெறுகின்றனர்.

ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ் ஆகியோர் சுழல்பந்துவீச்சாளர்களாகவும் ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், முக்கேஷ் குமார் ஆகியோர் வேகப்பந்துவீச்சாளர்களாகவும் குழாத்தில் இடம்பெறுகின்றனர்.

இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டி மொஹாலியில் 11ஆம் திகதியும் இரண்டாவது போட்டி இந்தூரில் 14ஆம் திகதியும் மூன்றாவது போட்டி பெங்களூருவில் 17ஆம் திகதியும் நடைபெறும்.

ஆப்கானிஸ்தான் குழாம்

ஆப்கானிஸ்தான் ரி20 குழாத்தில் நட்சத்திர வீரர்கள் ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் மீண்டும் இடம்பெறுகின்றனர்.

ஆனால், முதுகு வலியிலிருந்து முழுமையாக குணமடையாததால் ரஷீத் கான் விளையாடுவது உறுதியில்லை.

இதன் காரணமாக பதில் அணித் தலைவராக இப்ராஹிம் ஸத்ரான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இப்ராஹிம் ஸத்ரான் (தலைவர்), ரஹ்மானுல்லா குர்பாஸ், இக்ரம் அலிகில், ஹஸரத்துல்லா ஸஸாய், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஸத்ரான், மொஹமத் நபி, கரிம் ஜனத், அஸ்மாஉல்லா ஓமர்ஸாய், ஷராபுடின் அஷ்ரப், முஜீப் உர் ரஹ்மான், பஸால் ஹக் பாறூக்கி, பரீத் அஹ்மத், நவீன் உல் ஹக், நூர் அஹ்மத், மொஹமத் சலீம், காய்ஸ் அஹ்மத, குல்பாதின் நய்ப். 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்