கனேடிய அரசியலுக்கு அஞ்ச ஆரம்பித்துவிட்டன
8 தை 2024 திங்கள் 09:49 | பார்வைகள் : 1755
புலம்பெயர் தேசங்களில் தமிழ்த் தேசியத்தை இலக்காகக் கொண்ட ஈழத்தமிழ் அமைப்புகளின் பலத்தை அறிந்த ஒரு பின்னணியிலேதான், சிங்கள அரசியல் தலைவர்கள் பிரித்தானியா, அமெரிக்கா, கனடா போன்ற மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இயங்கும் குறிப்பிட்ட சில தமிழ் அமைப்புகளையும் தனிநபர் குழுக்களையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர் என்பது பட்டவர்த்தனமாகும்.
ஈழத்தமிழர்கள் அனைவரும் இலங்கை அரச கட்டமைப்புக்குள் இணைந்து வாழத் தயார் என்ற பொய்யான பரப்புரையின் ஊடாக புலம்பெயர் தமிழர்கள் பெருமளவில் வாழும் கனடா போன்ற நாடுகளில் கணக்கைக் காண்பிக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
வட அமெரிக்க நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தக்குத் தடை விதிக்கப்பட்டு, அத் தடை கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. அமெரிக்காவிலோ கனடாவிலோ தமிழீழ விடுதலைப் புலிகளில் உறுப்பினராக இருந்த ஒருவர் அதைக் கூறி அரசியல் தஞ்சம் கோரினால் அவருக்கு அகதி அந்தஸ்து வழங்கப்படமாட்டாது.
அவ்வாறான ஒருவர் விடுதலைப் புலிகளில் இருந்து விலகியபின் அல்லது விலக்கப்பட்டபின் கூட அவர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இயங்கினால் அல்லது விடுதலைப்புலிகளுக்கு எதிராகச் சாட்சி சொன்னவர்களுக்கு மட்டுமே கனடாவில் அதுவும் நீண்ட இழுத்தடிப்புக்குப் பின்னர் புகலிட அந்தஸ்து வழங்கப்படுவது வழமை.
ஆனால், ஐரோப்பிய நாடுகளில் நிலைமை அவ்வாறில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளில் அங்கம் வகித்து ஆனால், கருத்துநிலையை மாற்றாமல் இருக்கும் பலருக்கும் அகதி அந்தஸ்து வழங்கப்படுவது வழமையாகும்.
பிரித்தானிய அரசு புலிகளுக்குத் தடை விதித்திருந்தாலும் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அங்கு தொடர்ந்தும் வாழ அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், கனடாவில் அவ்வாறானதொரு சூழல் இன்றுவரையும் இல்லை.
இதனால், புலம்பெயர்ந்து கனடாவில் வாழும் ஈழத்தமிழர்களிடையே கனடாவின் தடை அரசியல் பற்றிய கடுமையான விமர்சனம் இருந்துவருகிறது.
2006ஆம் ஆண்டு கொன்ஸர்வேடிவ் கட்சியின் ஸ்-ரீபன் ஹார்ப்பர் பிரதமராகி இரண்டு மாதங்களுக்குள், அதுவும் பேச்சுவார்த்தைக் காலத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை கனேடிய அரசு முதன்முதலாக அமுல்படுத்தியது.
கனடாவில் தடை விதிக்கப்படுவதற்கு ஏழு வருடங்களுக்கு முன்னர், 1997இல் அமெரிக்கா விடுதலைப் புலிகள் மீது தடையை விதித்து இறுக்கமான நடவடிக்கைகளை முன்னெடுத்துவந்தது என்பது இங்கு ஒருசேர நோக்கப்படவேண்டியது.
புலம்பெயர் ஈழத்தமிழர்களின் வாக்குகளைப் பெற விழையும் தேர்தல் காலங்களின் போதெல்லாம் ஈழத்தமிழர்களின் கடுமையான அதிருப்தி குறித்து கனேடிய பிரதான கட்சிகள் அறிந்திருப்பதால், இலங்கை அரசு மீதும் தாம் அழுத்தம் தருவதாக, அல்லது தர இருப்பதாக பாவனை செய்வதும் சில அழுத்தங்களை மேற்கொள்வதும் வழமை.
எந்த ஹார்ப்பர் அரசாங்கம் 2009ஆம் ஆண்டுக்கும் முன்னர் விடுதலைப் புலிகள் மீது தடை விதித்ததோ அதே ஹார்ப்பர் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் 2013ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் தான் கலந்துகொள்ளாது புறக்கணித்து தமிழ் மக்களிடையே நற்பெயரையும் அதேவேளை, இலங்கையில் அமெரிக்காவுக்குத் தேவையான ஆட்சி மாற்றத்தை உருவாக்கும் அரசியலுக்கும் ஊக்கம் கொடுத்தார்.
கனடாவில் தற்போது லிபரல் கட்சி தலைமையிலான ஆட்சி நடைமுறையில் இருக்கிறது. அதன் பிரதமர் ஜஸ்ரின் ரூடோவும் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீடித்து வருகிறார். இந்தத் தடையை நீடிக்கும் அதேவேளை, ஈழத்தமிழர் இன அழிப்புக்கு நீதி கோருவது போன்ற பாவனையையும் ஆங்காங்கே வெளிப்படுத்திவருகிறார்.
இவ்வாறு, கனடாவில் புலம்பெயர் ஈழத்தமிழர் மனநிலையைப் புரிந்துகொண்டு இந்த இரண்டு பிரதான கட்சிகளும் இன அழிப்புக்கு நீதி கேட்பது போன்ற தேர்தல் அரசியற் பாவலாவைக் காட்டிவருகின்றன. இதனை ஈழத்தமிழர்களும் தகுந்தமுறையில் பயன்படுத்திக்கொள்ள ஓரளவுக்காவது ஆரம்பித்துவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.
குறிப்பாக, இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்கள் மீது இன அழிப்பு நடந்துள்ளது என்றும் அதற்குச் சர்வதேச நீதி வேண்டும் என்றும் புலம்பெயர் தமிழர்கள் தமது அரசியல் தரப்புகளுக்கு ஊடாக முன்வைக்கப்பட்ட தீர்மானம்கனேடிய பாராளுமன்றில் அனைத்துக்கட்சி ஆதரவுடனான தீர்மானமாக வெளிப்பட்டது மட்டுமல்ல, 2022ஆம் ஆண்டிலிருந்து மே 18 தமிழ் இன அழிப்பை நினைவுகூரும் நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டும் உள்ள சூழலும் தோன்றியுள்ளது.
ஈழத்தமிழர்கள் மீது தடை விடயத்தில் கடுமையாக இயங்கிய கனடா ஈழத்தமிழர்களுக்கு இலங்கையில் நடந்தது இன அழிப்பு என்று பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற அனுமதித்தது எதற்காக, இன அழிப்பு நினைவேந்தலை அங்கீகரித்தது எதற்காக என்று அங்கு மிகச் சிறிய அளவிலேனும் குடியேறி வாழும் சிங்களத் தரப்பினர் ஆத்திரமடைந்து கேள்வி எழுப்பிவருகின்றனர். அதேவேளை, சட்ட நடவடிக்கைகளைச் சவாலாக முன்னெடுத்தும் வந்துள்ளனர்.
கனடாவின் பிரபலமான நகரமாகவும் பெருமளவு ஈழத்தமிழர் வாழுகின்ற பகுதியாகவும் ரொறன்ரோ விளங்கும் போதும், அந்த நாட்டின் தலைநகரான ஒட்டாவாவில் இலங்கை அரசின் தூதராலயமும் குறைந்தளவில் என்றாலும் தாக்கம் செலுத்தக்கூடிய அளவில் சிங்கள சமூகமும் காணப்படுகின்றன.
இந்தச் சிங்கள அமைப்புகள் இன அழிப்பு என்ற கருத்தியலுக்கு கனேடிய அரச அங்கீகாரம் கிடைப்பதை எதிர்க்கின்றன. கனடாவைத் தொடர்ந்தும் இலங்கையின் பக்கம் வைத்திருக்கும் செயற்பாடுகளை அவை தீவிரப்படுத்தியுள்ளன.
அண்மையில் இலங்கைத் தீவுக்கு விஜயம் மேற்கொண்ட புலம்பெயர் தனிநபர் க்குழுவான சுரேன் சுரேந்திரன் மற்றும் கனேடிய தமிழர் பேரவை முட்டுக்கொடுக்கும் உலகத்தமிழர் பேரவை என்ற அமைப்பின் செயற்பாடுகளோடு சிங்கள புலம் பெயர் அமைப்பும் முட்டுக்கொடுத்து இயங்கிவருவதற்குக் கனடாவில் வலுப்பெறும் ஈழத்தமிழர் சார்பான அரசியலைத் தடுக்கும் நோக்கம் உள்ளது என்பது வெளிப்படை.
கீழே தரப்படும் சிங்கள அமைப்பின் காணொளி அதற்குச் சாட்சியாகிறது. அதேபோல இலங்கை அரசின் வெளிநாட்டமைச்சர் அலி சப்ரி கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ வெளியிட்ட இன அழிப்பு செய்தி தொடர்பான கருத்தும் இலங்கை அரசின் இது தொடர்பான பயத்தையும் வெளிப்படுத்துகிறது.
கனடாவில் பாராளுமன்றத் தேர்தல் 2025ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சூழலில், அல்லது அதற்கு முன்னர் திடுமென அவ்வாறு நடைபெறும் சூழல் எப்போது தோன்றினாலும், அதை எதிர்கொள்வதில் தற்போதைய ஆளும் கட்சியான லிபரல் கட்சிக்கு எதிராகப் போட்டியிடக்கூடிய எதிர்க்கட்சித் தலைவரும் கென்சர்வேற்றிக் கட்சியின் பிரதமருக்கான வேட்பாளருமான பியர் பொலியெர்வ் கூட தற்போது ஈழத்தமிழர்களுக்கு நடந்த இன அழிப்புக்குக் கனடா நீதி கோரும்
எனக் கூற ஆரம்பித்துள்ளார்.
இது மேலோட்டமாக வாக்கு அரசியலாகத் தெரிந்தாலும் இலங்கை தொடர்பான கனடா அரசின் வெளியுறவுக் கொள்ளையில் ஈழத்தமிழர் மீதான இன அழிப்புக்கான சர்வதேச நீதியைக் கோருதல் என்ற கோரிக்கையின் வகிபாகம் வலுப்பட ஆரம்பித்துள்ளதை நாம் இங்கு கூர்மையாக நோக்கவேண்டும்.
இதை மேலும் செம்மைப்படுத்தும் கடமை அங்குள்ள புலம்பெயர் ஈழத்தமிழர் அமைப்புகளுக்கு உண்டு என்ற கருத்தைக் கனடா வாழ் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.
தேர்தல் அரசியலுக்காக இரண்டு கட்சிகளும் ஈழத்தமிழர் மீதான இன அழிப்புத் தொடர்பான கருத்தியலை ஆதரிக்க ஆரம்பித்திருந்தாலும் கனடாவின் வெளியுறவுக் கொள்கையில் இதுவரை இன அழிப்புக்கான நீதி தாக்கம் செலுத்த ஆரம்பிக்கவில்லை என்பதையும் இங்கு நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
கனேடிய அரசின் ஐ.நா. மனித உரிமை விவகாரங்களுக்குப் பொறுப்பானவரும் ஒரு காலத்தில் சிங்களத் தரப்போடும் தமிழ்த் தரப்போடும் சமஷ்டி தீர்வுகுறித்து கருத்துத் தாக்கத்தை ஏற்பட்ட முனைந்தவருமான பொப் ரே கனடிய அரசு ஈழத்தமிழர் மீதான இன அழிப்பு என்ற கருத்தியலைத் தனது அதிகாரப்பூர்வ நிலைப்பாடாக இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று 2023 ஆரம்பத்தில் வலியுறுத்தியிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
நன்றி தமிழ்Mirror