ஒலிம்பிக் 2024 : நாளொன்றுக்கு 30 நிமிடங்கள் உடற்பயிற்சிக்கு அழைப்பு விடுக்கும் ஜனாதிபதி!!
8 தை 2024 திங்கள் 10:19 | பார்வைகள் : 4193
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று காலை சிறிய காணொளி ஒன்றை தனது X சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார். அதில் நாட்டு மக்களை நாள் ஒன்றுக்கு 30 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி அல்லது விளையாட்டுக்களில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் 200 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்த நிகழ்வை வரவேற்று கொண்டாடும் முகமாக அனைத்து மக்களுக்குமான செய்தியாக இதனை அவர் வெளியிட்டார். அவர் அதில் தெரிவிக்கையில், “வரலாற்றில் முதன் முறையாக ’கார்பன் இல்லாத’ (les plus décarbonés ) ஒலிம்பிக் போட்டிகளை நாம் ஏற்பாடு செய்துள்ளோம். பரிஸ் ஒப்பந்தத்தை மதிக்கும் பசுமை விளையாட்டுகளை நிகழ்த்துவதோடு, பாலின சமநிலை பேணும் விளையாட்டுக்களையும் நடாத்த உள்ளோம்!” என தெரிவித்தார்.
மேலும், இந்த நாட்களில் பிரெஞ்சு மக்கள் உடல் ஆரோக்கியம் பேணும் நிகழ்வொன்றை எதிர்பார்க்கிறோம். நாள் ஒன்றுக்குக்கு குறைந்தது 30 நிமிட உடற்பயிற்சியில் ஈடுபட அழைக்கிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.
குறித்த காணொளியில் ஜனாதிபதி குத்துச்சண்டை வீரர்கள் அணியும் கையுறை ஒன்றை வைத்துக்கொண்டு, பிரெஞ்சு குத்துச்சண்டை அணிக்கான சீருடையும் அணிந்துகொண்டு மேற்படி தகவல்களை வெளியிட்டிருந்தார்.