இலங்கையில் பொதுப் போக்குவரத்துகளில் பெண்களுக்கு துன்புறுத்தல்: 18 பேர் கைது
8 மாசி 2024 வியாழன் 05:10 | பார்வைகள் : 1704
பொதுப் போக்குவரத்துகளில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் தொடர்ந்துகொண்டு இருக்கிறது.
இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 18 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேநேரம், பொது போக்குவரத்துக்களில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களை கையாள்வதற்காக பொலிஸாரினால் இன்று (08) முதல் நாடளாவிய ரீதியில் விசேட வேலைத்திட்டம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகள், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள் என பல்வேறு பகுதிகளிலும் சிவில் உடையில் பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் 90 வீதமான பெண்கள் மற்றும் சிறுவர்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது பொது போக்குவரத்து சேவைகளில் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், தொந்தரவுகள், துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA) தெரிவிக்கின்றது.
இவ்வாறு துன்புறுத்தல்களை எதிர்கொள்பவர்களில் வெறும் 4 வீதமானவர்கள் மாத்திரமே இதுபோன்ற சம்பவங்கள் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்வதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் நோக்கில் இந்தியாவைப் போன்று இலங்கையிலும் பொதுப் போக்குவரத்துகளில் தனி இருக்கை வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை பல வருடங்களுக்கு முன்னதாக வலுப்பெற்றது.