Paristamil Navigation Paristamil advert login

அறிவுரை கூறுவதற்கு தகுதி வேண்டும்

அறிவுரை கூறுவதற்கு தகுதி வேண்டும்

8 மாசி 2024 வியாழன் 10:06 | பார்வைகள் : 1764


பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவர் பிரார்த்தனையின் முக்கியத்துவத்தை உலகுக்கு உணர்த்தியவர். சிறந்த ஆன்மீகவாதியாக திகழ்ந்தவர்.

உலகம் போற்றும் சுவாமி விவேகானந்தரின் குரு. இத்தகைய பெருமைகளுக்கு உரியவரான ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஒரு நாள் அன்பர்களின் மத்தியில் பேசிக்கொண்டிருந்தார். அவர் கூறும் கருத்துக்களை அனைவரும் உற்று கேட்டு கொண்டிருந்தனர். அப்பொழுது ஒரு பெண்மணி தன் ஐந்து வயது மகனை அழைத்துக் கொண்டு அவர் முன் வந்து நின்றாள்.

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அந்த பெண்மணியை பார்த்து, “தாயே உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார். உடனே அந்த அம்மையார் சுவாமி என் மகன் அதிகமான அளவு இனிப்பு சாப்பிடுகிறான். அதனால், அதிக அளவில் இனிப்புகளை சாப்பிடக்கூடாது என்று இவனுக்கு அறிவுரை கூறுங்கள் என்றாள். 

அவள் மேலும் நான் எவ்வளவோ எடுத்துக் கூறியும் கேட்கவில்லை. அடித்து பார்த்தேன், பயனில்லை என்றாள். பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் அந்தப் பெண்மணியை பார்த்து, “தாயே! நீங்கள் உங்கள் மகனை ஒரு வாரம் கழித்து என்னிடம் அழைத்து வாருங்கள்” என்றார்.

அந்த பெண்மணியும் பதில் ஏதும் பேசாமல் தன் ஐந்து வயது மகனை அழைத்துக் கொண்டு சுவாமியிடம் விடை பெற்று தன் வீட்டிற்கு சென்று விட்டாள். ஒரு வாரம் கடந்தது அந்தப் பெண்மணி மீண்டும் தன் ஐந்து வயது மகனை அழைத்துக் கொண்டு ஸ்ரீ ராமகிருஷ்ணரை பார்க்க சென்றாள். 

ஸ்ரீ ராமகிருஷ்ணர் அந்தப் பெண்மணியை அன்புடன் வரவேற்றார். பிறகு ஐந்து வயது மகனை பார்த்து தம்பி இனிப்புகளை அதிகம் சாப்பிடாதே. அவ்வாறு அதிகம் சாப்பிட்டால் அது உன் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். உன்  வயிற்றில் பூச்சிகள் உருவாகும், என அறிவுரை கூறினார்.

அந்தப் பெண்மணிக்கு ஒரு சந்தேகம் தோன்றியது. அதை சுவாமியிடம் கேட்டு விடலாம் என்று எண்ணிய அவள் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரை பார்த்து “சுவாமி, நான் முதல் நாள், என் மகனை உங்களிடம் அழைத்து வந்த போதே அதிகமாக இனிப்புகளை சாப்பிட்டால் உடல் நலம் பாதிக்கும் என்று என் மகனுக்கு அறிவுரை கூறியிருக்கலாமே? ஏன் ஒரு வாரம் பொறுத்து வர சொல்லி அறிவுரை கூறுகிறீர்கள்?” என்று கேட்டாள்.

அதற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணர் புன்னகை புரிந்தபடியே, “தாயே! நீங்கள் உங்கள் மகனை முதல் முறையாக அழைத்து வந்த போது நானே அதிக அளவில் இனிப்பு சாப்பிடுபவனாக இருந்தேன். அன்னிலையில் நான் உங்கள் மகனுக்கு அறிவுரை கூறும் தகுதியை பெற்றிருக்கவில்லை. பிறகு ஒரு வாரம் கழித்து வர சொன்ன போது நான் இனிப்புகளை சாப்பிடுவதை நிறுத்தி இருந்தேன். அதனால்தான் உங்கள் மகனுக்கு அறிவுரை கூறினேன்” என்றார். 

அந்த தாய் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரை புகழ்ந்த படியே சென்றாள். அந்த சிறுவனும் அன்று முதல் அதிகமான அளவில் இனிப்புகளை சாப்பிடுவதை நிறுத்தி விட்டான். 

நீதி : எதற்குமே ஒரு தகுதி வேண்டும். பிறருக்கு அறிவுரை கூறுவதற்கு முன்பு நாம் நல்வழியில் நடக்க வேண்டும். நாம் தவறான வழியில் நடந்து கொண்டு மற்றவர்களை நல்வழியில் நடக்குமாறு அறிவுரை கூறக்கூடாது. அதில் பயனில்லை.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்