தமிழ்த் தேசியத்துக்கான ஒற்றுமை
8 மாசி 2024 வியாழன் 10:20 | பார்வைகள் : 2079
தமிழ்த் தேசியம் பலப்படுதலொன்றே காலத்தின் தேவை என்பதனை உணர்ந்துகொள்ள தலைப்படுதலை முக்கியப்படுத்தல் நடைபெறுவதாகயில்லை. தனிப்பட்ட கோப தாபங்களையும், வெப்புசாரங்களையும் காண்பிப்பதற்கான தருணம் இதுவல்லவென்பதை யாரும் உணரவுமில்லை. தமிழர்களின் தேசியம் என்பது உணர்வு ரீதியானதே! இந்த உணர்வினை சரியாகக் கைக்கொள்ளவும் கையாளவும் தெரியாதவர்களாகவும், அதனைப்பற்றி புரிந்து கொள்ள முயலாதவர்களாகவும் தமிழர்கள் இருக்கிறார்களா என்ற கேள்வியை இந்த இடத்தில் கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த ஜதார்த்தத்தினை உணராது நடந்து கொள்வதுதான் தற்போது தமிழ்த் தேசியம் பற்றிப் பேச முனைபவர்களின் நிலை.
தமிழரசுக்கட்சியின் புதிய தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டார். அந்தத் தேர்வானது அக்கட்சிக்குரியதே. ஆனாலும், தமிழ்த் தேசியத்தின் ஒற்றுமை இதிலிருந்து தொடங்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழ்த்தேசியம் சார்ந்து சிந்திப்பவர்களிடம் பொதுவாக இருக்கிறது. இருந்தாலும் அது நடைபெறுமா என்பதுதான் புரியாத புதிர். இதற்கிடையில் பொதுச்செயலாளர் தெரிவு அமளிதுமளியில் முடிந்திருக்கிறது என்பதுடன் முற்றுப்பெறவுமில்லை. அந்த வகையில் இந்த எதிர்பார்ப்பைச் சீர் குலைக்கும் வகையில் இத் தெரிவு நிகழ்ந்துவிடக்கூடாது.
தமிழ் மக்களது அரசியலுரிமைக்கான அரசியலை யார் முன்கொண்டு செல்ல வேண்டும் என்பதனை ஒவ்வொரு கட்சியிலுமிருக்கின்ற ஒரு சிலரே தீர்மானிக்கின்ற நிலைமைக்கப்பால் இம்முறை பொது வாக்கெடுப்பின் அடிப்படையில் தமிழரசுக்கட்சியின் தலைமை தெரிவு நடைபெற்றிருக்கின்றமையானது பாராட்டப்பட்டிருக்கிறது. ஆனாலும், சுயநலன்களுக்கப்பால் மக்களுக்கான அரசியல் முதன்மைப்படுத்தப்பட வேண்டும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த இடத்தில்தான் தமிழ்த் தேசியத்துக்கான ஒற்றுமை என்கிற விடயம் முதன்மைபெறுகிறது. அண்மைய காலங்களாக தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் ஒற்றுமை பற்றிய பேச்சுக்கள் எழுந்தாலும் அதனை மேவும் வகையில் போராட்ட ஆயுத இயக்கங்களாக இருந்து அரசியல் நீரோட்டத்துக்குள் இணைந்தவர்களையும் விமர்சிக்கின்ற நிலை உருவாகியிருக்கிறது. இது காலத்தின் தேவையற்றது என்பதும், இது மேலும் தமிழ் தேசிய அரசியலில் முரண்பாட்டை ஏற்படுத்தும் என்பதும் மறக்கப்பட்டதனால் நடைபெறுவதாகவே உணர முடிகிறது. அதே நேரத்தில் அரசியல் தெளிவின்மை காரணமாகவும் இருக்கலாம்.
தமிழீழ விடுதலைப் போராட்டமானது ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அனைவரும் ஒரே நோக்கத்திற்காகவே போராடத் தொடங்கியிருந்தனர். சகோதர இயக்க எதிர்ப்பு, படுகொலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பலனாக உருவான பல விரோதச் செயல்கள் பலராலும் மறக்கப்பட முடியாதவை என்பதனை யாரும் மறுக்கமாட்டார்கள். ஆனால், 2001ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் கடந்தகால செயற்பாடுகளை, தவறுகளை மறப்போம் மன்னிப்போம் என்ற நிலைக்கு வந்ததன் பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அது காலம் கடந்த முடிவு என்றாலும், அது நிகழ்ந்தது ஒரு மன நிலை மாற்றமே. இதனை அறியாதவர்கள் இன்றைய காலங்களில் தமிழ்த் தேசியம் பற்றிப் பேசுவது வியப்பானது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழர்களுக்கான அரசியல் செயற்பாட்டுக்கானதாக ஆக்கி ஆரம்பத்தில் உதய சூரியனையே தேர்ந்தெடுத்திருந்தார். அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகியவை இணைந்திருந்தன.
உதய சூரியன் சின்னத்தில் எற்பட்ட பிரச்சினையால், 1976களிலேயே கிடப்பில் போடப்பட்டிருந்த வீட்டுச் சின்னம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. அச்சின்னம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் சின்னமாக பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் விடுக்கப்பட்டாலும் அதனை தமிழரசுக்கட்சி ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. இது பெரும் முரண்பாடாக தொடர்ந்துகொண்டேஇருந்தது. இறுதியில் கடந்த வருடம் அக்கட்சி தனிவழி சென்றது. ஆனாலும் அவர்கள் இணைய வேண்டும் என்ற வேண்டுகோள்கள் வராமலில்லை.
விடுதலைப் புலிகள் தங்களது கடந்தகால தவறுகளை மறந்து ஏனைய போராட்ட இயக்கங்களையும் இணைத்தே தமிழர்களின் தேசிய அரசியல் நடைபெறவேண்டும் என்ற நிலைக்கு வருவதற்கிடையில் பல பெரும் இழப்புக்களைத் தமிழர்கள் சந்தித்திருந்தார்கள். தேர்தல்கள் வரவிருக்கின்ற வேளையிலும் அதே போன்ற பல இழப்புகளைச் சந்தித்த பின்னர்தான் தமிழரசுக்கட்சி தன்நிலை உணரும் என்றால் அது ஒரு ஆபத்தான முடிவாகவே இருக்கும் என்பது கவனத்திலெடுக்கப்பட வேண்டும்.
யுத்தம் உக்கிரமடைந்து ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதனையடுத்து ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தினை தமிழரசுக்கட்சி சாதகமாக்கிக் கொண்டு தன்னுடைய ஏகாதிபத்திய ஆதிக்கத்தினை நடைமுறைப்படுத்தியதனால் உருவாகியிருக்கின்ற இந்த நிலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
தமிழரசுக்கட்சியின் செயற்பாடுகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்த அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சி வெளியேறியது. அதன் பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எவ். வெளியேறியது. அவ்வாறு பார்த்தால் ஆரம்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்த ஒற்றுமை தமிழரசுக்கட்சியின் ஏகாதிபத்திய நடைமுறை காரணமாக குலைந்து போனது என்றே கொள்ளலாம். பின்னர் 2023இல் தமிழரசுக்கட்சி தனி வழி தேடிச் சென்றது.
தமிழர்களின் அரசியல் சின்னமாக வீடும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் அரசியல் கட்சியாகவும் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்த போதிலும் தமிழரசுக்கட்சியின் ஏகாதிபத்திய, மேட்டுக்குடி நிலைப்பாடு காரணமாக கட்சிகள் பல வெளியேறும் நிலை ஏற்பட்டிருந்தது. தமிழர்களின் அரசியலை பல கட்சிகளாக தனித்து நின்று மேற்கொள்ள முடியாது என்பதனைப் புரிந்து கொண்டமையினால் உருவான கூட்டமைப்பு சிதைந்து கொண்டிருக்கிறது. இது தமிழ்த் தேசிய நலனைக் கருத்தில் கொள்ளாத அரசியலாலேயே நிகழ்கிறது என்பதே உண்மை.
தமிழ்த் தேசிய நலனும், அதன் நிலைப்பாடும் மாற்றமுறா வகையில் அரசியல் பயணம் தேவையாக இருக்கிறது இதனை மறந்து தங்களுடைய வெப்புசார, கோபதாப மநோநிலைகளை காண்பித்து வருபவர்கள் சற்றே அமைதி கொள்வதே தமிழ்த் தேசியத்துக்காற்றும் பணியாக அமையும். இல்லையேல் தேவையற்ற விளைவுகளை தமிழர்கள் எதிர்கொள்ளவும் அனுபவிக்கவும் நேரலாம்.
இந்த இடத்தில்தான் தமிழ்த் தேசிய அரசியலுக்கான ஒற்றுமை குறித்து விடயம் கவனத்திற்கு வருகிறது. தமிழ் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழரசுக்கட்சி என மிதவாத அரசியலுடனும், ரெலோ, புளொட், ஈரோஸ், ஈ.பி.ஆர்எல்எவ், ஈ.என்.டி.எல்.எவ்., ஈரோஸ் என ஆயுத அரசியலுடனும் தொடர்ந்த தமிழர்களுடைய விடுதலைக்கான முயற்சிகள் பலனற்றுப் போனதற்கு தமிழர்களிடமில்லாததான ஒற்றுமையே காரணம். அதனைக் கட்டியெழுப்புவது முக்கியமானதாகும்.
தமிழரசுக்கட்சியின் விலகலுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சின்னமற்றதானது. ஆந்த நிலையில் ஏற்கனவே பதிவிலிருந்த ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக அறிவிக்கப்பட்டது. இதில். ஈபிஆர்எல்எவ், ரெலோ, புளொட், தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன தற்போதுள்ளன. ஈழத் தமிழர்களின் வரலாற்றி;ல் சின்னங்கள் மாறுவதும், கூட்டணிகள் அமைக்கப்படுவதும் குலைவதும், பிரிவதும் சேர்வதும் சர்வ சாதாரணமானது என்ற வகையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி உருவாகியிருப்பதாகவே கொள்ளமுடியும்.
ஆயுத யுத்தம் மௌனிக்கப்பட்டு 15 வருடங்கள்; எட்டிவிட்டது. இருந்தாலும் இதுவரை இனப் பிரச்சினைக்கான தீர்வை இலங்கை அரசாங்கம் முன்வைக்கவில்லை. இது ஒரு காலம் கடத்தும் செயற்பாடாகவே சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில் மேலும் மேலும் பிளவுகள் தேவையற்றதே.
அத்தோடு உருவாகிவரும் தமிழ்த் தேசிய அரசியலை தமிழ் மக்கள் வெறுக்கும், வேறு அரசியல்களுக்குள் சாய்கின்ற நிலை ஆபத்தானது என்பதனையும் தமிழர்களின் அரசியல் தரப்பினர் உணர்ந்து கொள்ளவேண்டும். எனவே தமிழ்த் தேசியம் பலப்படுத்தப்படுத்தல் ஒன்றே காலத்தின் தேவை என்ற அடிப்படையில் இனியேனும் தமிழ்த் தேசிய அரசியலானது தமிழ்த் தேசியத்துக்கானது என்ற உணர்வு ஏற்பட்டு ஒற்றுமை உருவாகட்டும். இது காலத்தின் கட்டாயமும் கூட.
நன்றி தமிழ்Mirror