நண்டு ரசம்...
10 மாசி 2024 சனி 12:30 | பார்வைகள் : 1987
நண்டு ரசம் சுவையானது மட்டுமல்லாமல், சளித் தொல்லை, ஜலதோஷம் போக்கும் மருந்தாகப் பயன் படுகிறது. வீட்டிலேயே எப்படி நண்டு ரசத்தை எப்படித் தயார் செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம் வாங்க…
தேவையான பொருட்கள்:
நண்டு - 5
தக்காளி - 1/2
சின்ன வெங்காயம் - 10
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
எலுமிச்சை சாறு - 3 - 4 சொட்டுகள்
கொத்துமல்லி தழை - தேவைக்கேற்ப
மசாலா செய்ய தேவையானவை :
காய்ந்த சிவப்பு மிளகாய் - 5
பூண்டு - 6 பல்
இஞ்சிதுண்டு - 1
வால் மிளகு - 1/4 தேக்கரண்டி
அன்னாசி பூ - 1
திப்பிலி - 4
செய்முறை :
முதலில் ஆறு அல்லது வயல்களில் பிடித்த நண்டுகளை நன்றாக அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
பிறகு அந்த நண்டுகளை உரல்களில் போட்டு நன்றாக இடித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து காய்ந்த சிவப்பு மிளகாய், திப்பிலி, இஞ்சிதுண்டு, வால் மிளகு, பூண்டு, அன்னாசி பூ ஆகியவற்றை சேர்த்து ஓரளவிற்கு கொரகொரவென்று அரைத்து எடுத்து கொள்ளவும்.
பின்னர் ஒரு மண் சட்டியை எடுத்து அதில் இடித்து வைத்துள்ள நண்டை போட்டு கொள்ளவும்.
அதனுடன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி மற்றும் மசாலா பொருட்கள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக கைகளால் கலந்து கொள்ளவும்.
பிறகு ரசம் வைக்க தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து அதை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
நண்டு ரசம் நன்றாக கொதித்து சுண்டி வரும் தருவாயில் எலுமிச்சை சாறு, கொத்துமல்லி தழை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.