பொருளாதார நிலை பற்றி எடுத்து சொல்வது எங்களின் கடமை: நிர்மலா சீதாராமன்
10 மாசி 2024 சனி 12:50 | பார்வைகள் : 2196
மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு என்ற முறையில், காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ., ஆட்சியின் போதும், தற்போதும் உள்ள நாட்டின் பொருளாதாரத்தின் உண்மை நிலையை பார்லிமென்டிலும், மக்களிடமும் எடுத்துச் சொல்வது எங்களின் கடமை '' என வெள்ளை அறிக்கை மீது ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.
நாட்டின் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்லிமென்டில் தாக்கல் செய்தார். இதன் மீது நேற்று ( பிப்.,09) விவாதம் நடந்தது.
ராஜ்யசபாவில் இன்று நடந்த விவாதத்தில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: வெள்ளை அறிக்கையை முன்னரே வெளியிட்டு இருந்தால், அமைப்புகள், முதலீட்டாளர்கள், மக்களின் நம்பிக்கையை பாதித்து இருக்கும். 10 ஆண்டுகளாக உழைத்து பொருளாதாரத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு வந்துள்ளோம். தற்போது உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உள்ளது. விரைவில் 3வது இடத்தை பிடிக்கும்.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு என்பதால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போதும், தற்போதும் உள்ள பொருளாதாரத்தின் உண்மையான நிலை பற்றி மக்களிடமும், பார்லிமென்டிலும் எடுத்து சொல்வது எங்களின் கடமை.
வளர்ச்சி திட்டங்களை பிரதமர் தனிப்பட்ட முறையில் கண்காணிக்கிறார். மாவட்ட அளவில் அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார். சாதித்த ஒன்றை அழிக்கும் திறன் காங்கிரசுக்கு உண்டு. 2017 ல் 17.3 சதவீதமாக இருந்த பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பின்மை, 2023ல் 13.4 சதவீதமாக குறைந்தது. <br><br>பொருளாதாரத்தை ஒரு குறிப்பிட்ட நிலைக்கு கொண்டு வந்திருப்பதாலும், அடுத்த சில ஆண்டுகளுக்குள் அதைச் சொல்ல முடியும் என்ற நம்பிக்கையில் வெள்ளை அறிக்கை கொண்டு வந்துள்ளோம். அதனால் தான், பிரதமர் மோடி ‛‛ எனது 3வது பதவிக்காலத்தில் நிச்சயம், நாட்டின் பொருளாதாரம் 3வது இடத்தை அடையும்'' என்று கூறினார். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை.
சுதந்திர இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் பிரதமர் மோடி இரண்டாவது ரயில்வே நிலையத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். முதல் ரயில் நிலையத்தை திறந்ததும் காங்கிரஸ் அம்மாநிலங்களை மறந்துவிட்டது. மன்மோகன் சிங் அசாம் மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர் என்பதை நினைவில் வைத்து அங்கு சில பணிகளையாவது அக்கட்சி செய்திருக்கலாம். நேரு குடும்பத்தை காட்டிலும் திறமையானவர்களை கண்டு காங்கிரஸ் பயந்தது. நாம் தூய்மையான, பொறுப்பு வாய்ந்த நிர்வாகத்தை கொண்டிருக்க வேண்டும். அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட அமைப்பு மூலம் நிர்வாகம் செய்யக்கூடாது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.