Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேலிய படையினரின் தாக்குதலில் சிக்கி காப்பாற்றுமாறு  கதறிய சிறுமியின் நிலை

இஸ்ரேலிய படையினரின் தாக்குதலில் சிக்கி காப்பாற்றுமாறு  கதறிய சிறுமியின் நிலை

11 மாசி 2024 ஞாயிறு 09:59 | பார்வைகள் : 2947


கடந்த மாதம் உறவினர்களுடன் காரில் காசா நகரிலிருந்து தப்பிவெளியேறுகையில் இஸ்ரேலிய படையினரின் தாக்குதலில் சிக்குண்ட நிலையில் தன்னை காப்பாற்றுமாறு தொலைபேசியில் அலறிய ஆறு வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஹின்ட் ரஜாப் என்ற அந்த சிறுமி தனது உறவினர்களுடன் காரில் தப்பிவெளியேறிக்கொண்டிருக்கையில் இஸ்ரேலின் டாங்கி தாக்குதலில் அவள் பயணித்துக்கொண்டிருந்த கார் சிக்குண்டது.

சிறுமிக்கும் அவசரதொலைபேசி அழைப்பு பிரிவிற்கும் இடையிலான உரையாடல்கள் தாக்குதலில் சிறுமிமாத்திரம் உயிர் பிழைத்திருக்கின்றாள் என்பதை வெளிப்படுத்தியிருந்தன.

ஹின்ட் ரஜாப் தனது உறவினர்களின் உடல்கள் மத்தியில் மறைந்திருந்து தன்னை காப்பாற்றுமாறு தொலைபேசி மூலம் கதறினாள்.

எனினும் துப்பாக்கி பிரயோக சத்தங்களின் மத்தியில் அவளின் தொலைபேசி உரையாடல் துண்டிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பாலஸ்தீன செம்பிறை சங்கத்தை சேர்ந்தவர்கள் அந்த பகுதிக்கு சென்றனர்.

அவர்களால் ஹின்ட் பயணம் செய்த காரை கண்டுபிடிக்க முடிந்தது,அந்த கார் சிதைவடைந்த நிலையில் காணப்பட்டது துப்பாக்கி சன்னங்கள் அதனை துளைத்திருந்தன.

காருக்குள் ஹின்ட் உட்பட ஆறுபேரின் உடல்களை கண்டுபிடித்துள்ளதாக துணைமருத்துவபிரிவினர் பத்திரிகையாளர்களிற்கு தெரிவித்துள்ளனர்.

அருகில் மற்றுமொரு வாகனம் முற்றாக எரியுண்ட நிலையில் காணப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது செம்பிறை  சங்கத்தினர் பயணித்த வாகனமாகயிருக்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலின் குண்டுவீச்சினால் இரண்டு செம்பிறைச்சங்க உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாகவும் துணைமருத்துவபிரிவினர் தெரிவித்துள்ளனர்

சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு விரைந்த அம்புலன்ஸ் வாகனத்தை இஸ்ரேல் வேண்டுமென்றே இலக்குவைத்துள்ளது என பாலஸ்தீன செம்பிறைசங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

சிறுமியை காப்பாற்றுவதற்காக அம்புலன்ஸை அனுப்புவது என இஸ்ரேலுடன் ஒருங்கிணைந்த செயற்பட்ட போதிலும் அம்புலன்ஸ் வேண்டுமென்றே தாக்கப்பட்டுள்ளது என பாலஸ்தீன செம்பிறை சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

ஹின்ட்டினை காப்பாற்றுவதற்காக துணை மருத்துவபிரிவினரை அனுப்புவதற்காக இஸ்ரேலுடன் ஒருங்கிணைந்து செயற்படுவதற்கே பல மணிநேரம் எடுத்தது என பாலஸ்தீன செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது.

நாங்கள் அனுமதியை பெற்றோம் எங்கள் பணியாளர்களை அனுப்பினோம் அவர்கள் அங்கு சென்றதும் சிறுமி சிக்குண்டுள்ள காரை காணமுடிவதாக தெரிவித்தனர் அதன் பின்னர் எங்களால் துப்பாக்கி பிரயோகத்தை  மாத்திரம் கேட்க முடிந்தது என செம்பிறைசங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவசர தொலைபேசி சேவையுடன் சிறுமி  உரையாடிய விடயங்கள் குறித்த பதிவுகள் பகிரங்கப்படுத்தப்பட்டதை தொடர்ந்து சிறுமியை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்தன.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்