Paristamil Navigation Paristamil advert login

அரசியலில் நீடித்தால் விஜய்க்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது

அரசியலில் நீடித்தால் விஜய்க்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது

12 மாசி 2024 திங்கள் 12:39 | பார்வைகள் : 1865


ஒரு தொகுதியில் விஜயும் உதயநிதியும் போட்டியிட்டால் நிச்சயமாக விஜய் அதில் வெற்றியீட்டுவார். தி.மு.க. கட்சி எவ்வளவு பெரிய வலிமையானதாக இருந்தாலும் கூட ஒரு தொகுதியில் இருவரும் நின்றால் அதில் விஜய் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று இந்தியாவின் மூத்த ஊடகவியலாளர்,  அரசியல் திறனாய்வாளர் கலாநிதி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

நடிகர் தளபதி விஜயின் அரசியல் பிரவேசம்  தொடர்பாக வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

நடிகர் விஜய்க்கு இருக்கின்ற சாதக பாதக நிலைகள் குறித்து  விபரித்த  ராதாகிருஷ்ணன் விஜய் கொள்கைகளை முன்வைக்கும் வரை எதனையும்  நிச்சயமாக கூற முடியாது என்றும் குறிப்பிடுகிறார்.

கடந்த இரண்டாம் திகதி நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியின் பெயரை (தமிழக வெற்றி கழகம்) வெளியிட்டதுடன்  மூன்று பக்க அறிக்கையைும் முன்வைத்தார்.  அரசியல் தனது விருப்பு இல்லையென்றும் அது தனது வேட்கை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் விஜயின் கட்சியின் பெயரில் திராவிடம் என்ற சொல் இடம்பெறாமை அங்கு பேசுபொருளாகியுள்ளது. ஆனால் அது விஜயின் சாதுரியமான முடிவு என்று  ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டுகிறார்.

திராவிடம் என்ற சொல்லை வைக்காமையை விஜயின் ஒரு சாதுரியமான முடிவாகவே நான் பார்க்கிறேன்.    திராவிடம் என்ற சொல்லுக்கு எதிரான சில திட்டமிட்ட பிரச்சாரங்கள் முன்வைக்கப்படுகின்றன.  அந்த எதிர்மறை தாக்கத்திலிருந்து விடுபடவே விஜய் இந்த முடிவை எடுத்திருக்கலாம்   என்று  ராதாகிருஷ்ணன் கூறுகிறார்.

செவ்வியில் அவர்  குறிப்பிட்ட முக்கிய விடயங்கள் வருமாறு

கேள்வி : நடிகர் விஜய் அரசியல் பிரவேசத்தை அறிவித்திருக்கின்றார்.  கட்சியின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.  அறிக்கையையும் வெளியிட்டிருக்கின்றார்.   அவரின்  அரசியல் பிரவேசத்தை  எப்படி பார்க்கிறீர்கள்? 

பதில் என்னை பொறுத்தவரையில் நடிகர் விஜய் இந்த முடிவை எடுப்பதற்கு தள்ளப்பட்டார்.    கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று நான் கூறியிருந்தேன்.  அப்போது அ.தி.மு.க. ஒரு சிதைந்த கட்சியாக தோற்றமளித்தது. கடந்த ஆட்சியின்போது ஜெயலலிதாவின் மரணத்தின் பின்னர் எடப்பாடி முதலமைச்சராகினார்.    பன்னீர்செல்வம் நிதி அமைச்சராகினார்.  கட்சி நன்றாக செயல்பட்டு கொண்டு வந்தது.   ஆனால் 2021 ஆம் ஆண்டின் பின்னர் கட்சி சிதைய ஆரம்பித்தது.  கட்சிக்கு பெரிய தொய்வு ஏற்பட்டது.   எடப்பாடிக்கும் பன்னீர்செல்வத்திற்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டன.  ஒரு கட்டத்தில் அ.தி.மு.க.  முடங்கிய கட்சியாக மாறியது.  அப்போதுதான் விஜய் அரசியலுக்கு வர வேண்டும்,  அந்த இடைவெளியை நிரப்ப வேண்டும் என்று நான் கூறியிருந்தேன்.

ஆனால் தற்பொழுது அந்தநிலை மாறிவிட்டது.  அ.தி.மு.க.  மீண்டும் ஸ்திரமடைந்துவிட்டது.  எடப்பாடிக்கு கட்சியின் சின்னம் கிடைத்துவிட்டது.  அவர்  தலைவராகிவிட்டார்.  கட்சியின் தலைமையகம் கிடைத்துவிட்டது.  கட்சி மீண்டும் தற்போது ஒரு நிலைக்கு வந்துவிட்டது.  பன்னீர்செல்வம் வெளியே இருக்கிறார்.  டிடிவி தினகரன் மற்றும் சசிகலா களத்திலேயே இல்லை. மறுபுறம்  தி.மு.க.வும் கூட்டணி கட்சிகளும் வலுவாக இருக்கின்றன.  அரசு சார்ந்த  விடயங்களில் சிக்கல்கள் காணப்படுகின்றன.  அந்தப் பிரச்சினைகளில் மக்களுக்கு விரக்தி ஏற்பட்டால் அவர்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்கள்.

கேள்வி : அப்படியானால் இந்த பின்னணியில் ஏன் விஜய் அரசியலுக்கு வர என்ன முக்கிய காரணம்? 

பதில் இந்த தருணத்தில் விஜய் அரசியலுக்குள் வர தள்ளப்பட்டார் என்று நான் கருதுகிறேன்.  விஜய்க்கு இரண்டு இடங்களில் இருந்து அழுத்தங்கள் வந்தன. மத்தியில் பா.ஜ.க.வில் இருந்து விஜய்க்கு அழுத்தம் வந்தது.  அதேபோன்று இங்கே தமிழகத்திலும் அவருக்கு பாரிய அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன.  தி.மு.க.வில் இளைய வாரிசு என்று திடீரென்று உதயநிதியை கொண்டு வந்து எதிர்கால முதல்வர் என்ற விம்பத்தை உருவாக்கி செயல்பட்டு கொண்டிருக்கின்றனர்.  அவர் கிட்டத்தட்ட சினிமாவின் முழு கட்டுப்பாட்டையும் தன்னகத்தே    கொண்டிருப்பதாக தெரிகிறது.  அவரும் நடிகராக இருந்தார்.  அவருக்கு இந்த விடயங்கள் தெரியும்.  சினிமாவில்   இருக்கின்ற சகல பிரச்சினைகளையும்  ஏறத்தாழ அவர்தான் கையாளுகின்றார் என்று தெரிகிறது.  இதில் விஜயின் படங்களும் உட்படுகின்றன.   மிகப்பெரிய பிரமாண்ட படங்களை உதயநிதியின்  ரெட் ஜாயிண்ட் என்ற நிறுவனமே வெளியிடுகிறது.  அப்படிபார்த்தால் சினிமா துறையிலும் விஜய்க்கு நெருக்கடி வருகிறது.  இந்த நெருக்கடிகளை எப்படி முறியடிக்க முடியும் என்ற பின்னணியில்தான்   விஜயின் அரசியல் பிரவேசம் அமைந்திருப்பதாக நான் கருதுகிறேன்.

கேள்வி தற்போது விஜயின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் திராவிடம் என்ற சொல் இல்லை என்பது ஒரு பேசு பொருளாக மாறி இருக்கிறது.  அதற்கு என்ன நடந்தது? அதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில் விஜய் அரசியல் கட்சியின் பெயருக்கு மற்றுமொரு சிக்கலும் வந்திருக்கிறது. அவருடைய டி.வி.கே என்ற அந்த சுருக்க பெயருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி உரிமை கோரி இருக்கிறது. திராவிடம் என்ற சொல்லை வைக்காமையை விஜயின் ஒரு சாதுரியமான முடிவாகவே நான் பார்க்கிறேன். திராவிடம் என்ற சொல்லுக்கு எதிரான சில திட்டமிட்ட பிரச்சாரங்கள் முன்வைக்கப்படுகின்றன.  அந்த எதிர்மறை தாக்கத்திலிருந்து விடுபடவே விஜய் இந்த முடிவை எடுத்திருக்கலாம்.  ஆனால் இங்கு விஜயின் கொள்கைகள் என்ன என்பதிலேயே   அனைத்தும் தங்கியிருக்கின்றன.  கொள்கைகள் தொடர்பாக விஜய் இதுவரை தெளிவாக ஏதையும் குறிப்பிடவில்லை. அதுவரை ஒரு தெளிவின்மை தொடர்ந்து நீடிக்கிறது.

கேள்வி : விஜயின் இந்த அரசியல் பிரவேசம் யாருக்கு சவாலாக அமையும்?  தி.மு.க.வுக்கா அல்லது அ.தி.மு.க.வுக்கா அல்லது சீமான் கமல்ஹாசன்  போன்ற  அரசியல்  கட்சிகளுக்கா சவாலாக அமையப்போகிறது?

பதில் என்னை பொறுத்தவரையில் விஜயின்  அரசியல் பிரவேசம் பா.ஜ.க.வுக்கே பாரிய சவாலாக அமையும்.  தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் அடிப்படை ஆதரவாளர்கள்   வாக்காளர்கள் இருக்கின்றனர்.  அவர்கள் அந்த கட்சிகளை விட்டு போகமாட்டார்கள்.  எவ்வளவுதான் தி.மு.க.வை திட்டினாலும் அதன் குறைகளை எடுத்துக் கூறினாலும் வாக்களிக்கும்போது அந்த கட்சிக்கே   ஆதரவாளர்கள் வாக்களிப்பார்கள். அ.தி.மு.க.வின் ஆதரவாளர்களும் பெரும்பாலானவர்கள் அந்த கட்சியிலேயே இருப்பார்கள்.  ஒரு சில தொய்வுகள் வரலாம்.  இல்லாவிடின் இந்த கட்சிகள் எப்போதோ சோர்ந்து போயிருக்குமே ?  மறுபுறம் வளரும் கட்சி என்று பார்த்தால் அது பா.ஜ.க.வாகத்தான் இருக்கிறது.  பா.ஜ.க.வுக்கு வாக்களிக்கும் மக்கள் ஏன் நாம் விஜய்க்கு வாக்களிக்க கூடாது என்று எண்ணுவதற்கான சாத்தியம் இருக்கிறது.  பா.ஜ.க.வின் இந்துத்துவா கொள்கைகளை தமிழக மக்கள் விரும்பவில்லை.  இந்து மக்கள்  அதனை விரும்பவில்லை.

தி.மு.க.வையும் அ.தி.மு.க.வையும் விரும்பாதவர்கள் அதேநேரம் பா.ஜ.க.வுக்கு செல்ல விரும்பாதவர்கள் என்ற ஒரு பிரிவினர் இருப்பார்கள். அவர்கள் விஜயின் கட்சிக்கு ஆதரவளிப்பார்கள்.  விஜயின் கொள்கைகளைப் பொறுத்து இந்த அனைத்து விடயங்களும் தங்கி இருக்கின்றன. 2024 ஆம் ஆண்டு களமிறங்க போவதில்லை என்றும் விஜய் அறிவித்திருக்கிறார்.  எனவே 2026 ஆம் ஆண்டுதான் அதன் விளைவுகளை பார்க்க முடியும்.

கேள்வி : விஜயின் இந்த அரசியல் பிரவேசத்தின் பின்னணியில் பா.ஜ.க. இருப்பதாக முன்வைக்கப்படுகின்ற  வாதத்தின் செல்லுபடி தன்மையை நிராகரிக்கீன்றீர்கள் அப்படியா?

பதில் விஜய் பேசும்வரை அல்லது கொள்கைகளை முன்வைக்கும் வரை அதுபற்றி நாம் தீர்மானிக்க முடியாது.  அவர் அவற்றை முன்வைக்கும் வரை நாம் காத்திருக்க வேண்டும்.  தற்போது உதாரணமாக கூறுவதென்றால் ரஜினி அனைவருக்கும் பணிந்து போய்க் கொண்டிருக்கிறார்.  ஆனால் விஜய் பற்றி எமக்கு தெரியாது.  1996 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனே தமிழகத்தை காப்பாற்ற முடியாது என்று கூறிய ரஜினி இன்று எப்படி இருக்கின்றார் என்று பாருங்கள்.  மத்திய அரசாங்கத்துக்கு பயந்து செயல்படுகின்ற ஒரு ரஜினியை பார்க்கிறோம்.  அந்த பயத்தை நாம் விஜயிடம் பார்க்கவில்லை.  

கேள்வி : அமைச்சர் உதயநிதியின் தற்போதைய நகர்வுகள் மற்றும் அவரை சுற்றி இடம்பெறும் நகர்வுகள் தொடர்பாக நீங்கள் குறிப்பிட்டீர்கள்.   2026 ஆம் ஆண்டு தேர்தலில் உதயநிதியை   எதிர்த்து விஜய் போட்டியிட்டால் அது உதயநிதிக்கு ஒரு சவாலாக அமையுமா?

பதில் நிச்சயமாக சவாலாகவே அமையும்.  அதுதான் அவருடைய இலக்காகவும் இருக்கலாம்.  ஒரு தொகுதியில் விஜயும் உதயநிதியும் போட்டியிட்டால் நிச்சயமாக விஜய் அதில் வெற்றியீட்டுவார்.   தி.மு.க. கட்சி எவ்வளவு பெரிய வலிமையானதாக இருந்தாலும் கூட ஒரு தொகுதியில் இருவரும்   நின்றால் அதில் விஜய் நிச்சயம் வெற்றி பெறுவார்.  அதேபோன்று வேண்டுமென்றோ வேண்டாம் என்றோ சினிமாவின் கட்டுப்பாடு உதயநிதியின் கைகளில்இருப்பதாக தெரிகிறது.  அது அவருக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.  ஜெயலலிதாவுக்கும் அவ்வாறு தான் இருந்தது.    சினிமா துறையை ஒதுக்கி வைத்தால் அதனை அடக்கி வைத்தால் நிச்சயமாக அவருக்கு எதிர்மறை விமர்சனங்கள் வருவதை தவிர்க்க முடியாது.  ஜெயலலிதா ஒரு காலத்தில் கமல்ஹாசனின் படங்களை ,   ரஜினியின் படங்களை   விஜயின் படங்களை முடக்க நினைத்தார்.  அதுவே அவருக்கு கெட்ட பெயரை கொண்டு வந்தது.  தற்போது சமீபத்தில் கூட விஜயின் படங்களுக்கு பிரச்சினைகள் வந்திருக்கின்றன.  மாறாக உதயநிதியின் படங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது என்றும் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.  தமிழகத்தில் இன்றைய நிலையில் விஜய் ஒரு முக்கியமான நடிகராக இருக்கின்றார்.  இந்தியாவில் முதல்தர வர்த்தக  பெறுமதிவாய்ந்த  நடிகராக சாருக்கான் இருக்கிறார். அதற்கு அடுத்ததாக விஜய்தான் இருக்கிறார். அவ்வாறு முதல் தரத்தில் இருக்கின்ற விஜயை கொச்சைப்படுத்த முயற்சிக்கும்போது அது நெருக்கடியை கொண்டு வருகிறது.  அந்த இடத்திலிருந்து தான் நான் விஜயின் அரசியல் பிரவேசத்தையே பார்க்கிறேன்.

கேள்வி :  விஜய் அரசியலில் பிரதானமாக பங்கெடுக்கும் போது அது இலங்கை தமிழ் மக்களுடனான அவரது உறவில் எவ்வாறு தாக்கம் செலுத்தும் ?

பதில் இலங்கை தமிழ் மக்கள் நிச்சயமாக விஜயை நேசிக்கின்றார்கள்.  இதற்கு நான் பல இடங்களில் சான்று பகிர்வேன்.  நான் புகைப்படங்களை   எடுத்திருக்கின்றேன்.  விஜயின் ரசிகர்களை நான் முல்லைத்தீவில் பார்த்திருக்கிறேன். மனம் சோர்ந்திருக்கின்ற மக்கள் கூட விஜயை நேசிக்கின்றார்கள்  என்பது எனக்கு தெரியும்.  மக்களுக்கு விஜயின் மேல் நல்ல நம்பிக்கை இருக்கிறது.  அந்த நம்பிக்கையை விஜய் எந்தளவு தூரம் காப்பாற்றுவார் என்பதே  எனது ஆதங்கமாக இருக்கிறது.   இலங்கை தமிழ்  மக்களை நாட வேண்டுமென்றால் அந்த நாட்டின் அரசாங்கத்தின் ஊடாகவே அதனை செய்யவேண்டும்.  எனவே இதனை விஜய் எவ்வாறு அணுகுவார் என்பதை பார்க்க வேண்டும்.  இதனை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.  பெரிய மாற்றங்களை செய்யக்கூடிய இடத்தில் தான் விஜய் இருக்கின்றார்.

கேள்வி : விஜய் 2026 ஆம் ஆண்டு அல்லது 2031 ஆம் ஆண்டில்  முதல்வராகுவார் அல்லது ஆட்சி அமைப்பார் என்று  முன்வைக்கப்படுகின்ற வாதத்தை நீங்கள் முற்றாக மறுக்கவில்லை அப்படியா?

 பதில் நிச்சயமாக நான் அதனை மறுக்கவில்லை.  2024 ஆம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. எவ்வாறு நடத்தப்படும் என்பதில் இது தங்கியிருக்கிறது.  பா.ஜ.க. தற்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க கோரியிருக்கிறது. அதன் விளைவுகள் எப்படியிருக்கும் என்று பார்க்க வேண்டும்.  இதன் பிரதிபலனாக அ.தி.மு.க.வின் வாக்கு வாங்கி சிதைந்தால் அது விஜய்க்கு சாதகமாக அமையும்.  அ.தி.மு.க.வின் கொள்கைகளை பார்த்தால் ஏழைகளுக்கு உதவுவது என்ற எம்.ஜி.ஆர். இன் கொள்கையே  இன்னும் நீடிக்கிறது.  கிட்டத்தட்ட விஜயும்  அவ்வாறான ஒரு கொள்கையில் தான் இருக்கின்றது.  விஜய் அரசியலில்  நீடித்தால்   நிச்சயமாக நல்ல எதிர்காலம் இருக்கிறது.  ஆனால் பல விட்டுக்கொடுப்புகளுடன்   பிரதான கட்சிகளுடன் கூட்டணி அமைக்க விஜய் முற்பட்டால் அது அவருக்கு சாதகமாக அமையாது.


நன்றி வீரகேசரி

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்