இலங்கை நிகழ்ச்சி குறித்து கலா மாஸ்டர் கூறும் விளக்கம்..!
12 மாசி 2024 திங்கள் 13:33 | பார்வைகள் : 2257
இலங்கை யாழ்ப்பாணத்தில் சமீபத்தில் ஹரிஹரன் இசை நிகழ்ச்சி நடைபெற்ற போது அதில் பெரும் பிரச்சனை ஏற்பட்டதாக செய்தி வெளியான நிலையில் இதுகுறித்து கலா மாஸ்டர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:
இந்த நிகழ்ச்சியை முதலில் குஷ்பு தான் தொகுத்து வழங்குவதாக இருந்தது. ஆனால் சில அரசியல் காரணங்களுக்காக அவர் வருவதை சிலர் விரும்பவில்லை. குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது பேசியதை காரணம் காட்டி குஷ்பு வரக்கூடாது என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து குஷ்பு ’நான் வரவில்லை நீங்கள் போயிட்டு வாருங்கள்’ என்று கூறியதை அடுத்த தான் குஷ்புவுக்கு பதிலாக டிடி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்’ என கலா மாஸ்டர் கூறியுள்ளார்.
மேலும் இந்த நிகழ்ச்சியை பார்க்க 45 ஆயிரம் பேர் வருவார்கள் என்று தான் நாங்கள் எதிர்பார்த்தோம், அந்த அளவுக்கு தான் டிக்கெட்டும் விற்பனை செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இலவசமாக பார்க்க வந்த கூட்டம் அதிகமாகியதால் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் வரை வந்துவிட்டார்கள். கூட்டத்தில் இருந்த ஒரு சிலர் நட்சத்திரங்களை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கேமரா பொருத்தப்பட்டிருந்த சாரங்களில் ஏறியதால் தான் பிரச்சனை ஏற்பட்டது.
இதனை அடுத்து நாங்கள் மிகவும் கேட்டுக் கொண்டதற்கு இணங்கவும், போலீசாரும் தலையிட்டு கூட்டத்தை கட்டுப்படுத்தியதால் 20 நிமிடம் மட்டும் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. அதன்பின் நிகழ்ச்சி மீண்டும் நடந்தது. மேலும் தமன்னா டான்ஸ் முடிந்தவுடன் நிகழ்ச்சியை முடித்து விட்டதாக பலர் குற்றம் சாட்டியுள்ளனர், தமன்னா நடனத்தோடு நாங்கள் நிகழ்ச்சியை முடித்துக் கொள்வதாக தான் ஆரம்பத்திலேயே திட்டமிட்டு இருந்தோம், அது தெரியாமல் தேவையில்லாத வதந்தியை கிளப்பி வருகிறார்கள்’ என்று கலா மாஸ்டர் கூறியுள்ளார்.மொத்தத்தில் இலங்கை மக்கள் எங்கள் மீது மிகுந்த அன்பு வைத்ததை பார்த்து நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம் என்று கலா மாஸ்டர் கூறியுள்ளார்.