ஆட்ட நேரத்தில் 3 பெனல்டிகளைப் புகுத்தி ஆசிய சம்பியனான கத்தார்
12 மாசி 2024 திங்கள் 14:18 | பார்வைகள் : 2318
கத்தாரில் கடந்த வார இறுதியில் நிறைவுக்கு வந்த ஆசிய கிண்ண கால்பந்தாட்டத்தில் வரவேற்பு நாடான கத்தார் சம்பியனானது.
இந்த கிண்ணத்தை இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக வென்றதன் மூலம் ஆசிய கிண்ண வரலாற்றில் அடுத்தடுத்து இரண்டு தடவைகள் சம்பியனான ஐந்தாவது நாடாக கத்தார் பதிவானது.
ஜோர்தானுக்கு எதிராக லுசெய்ல் விளையாட்டரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆட்ட நேரத்தில் அக்ரம் அவிவ் புகுத்திய 3 பெனல்டி கோல்களின் உதவியுடன் 3 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கத்தார் ஆசிய சம்பியனானது.
ஆசிய கிண்ண இறுதிப் போட்டி வரலாற்றில் ஹெட்-ட்ரிக் முறையில் கோல் போட்ட முதலாவது வீரர் என்ற சாதனையை அக்ரம் அவிவ் நிலைநாட்டினார்.
அப் போட்டியில் ஜோர்தான் வீரர்கள் தங்களது பெனல்டி எல்லைக்குள் வைத்து கத்தார் வீரர்களை வீழத்தியதால் கத்தாருக்கு பெனல்டிகள் வழங்கப்பட்டது. அதில் கடைசி இரண்டு பெனல்டிகள் வீடியோ உதவி மத்தியஸ்தரின் ஒத்துழைப்புடன் வழங்கப்பட்டது.
போட்டியின் 22, 73, 90+5ஆவது நிமிடங்களில் வழங்கப்பட்ட பெனல்டிகளை அக்ரம் அவிவ் இலக்கு தவறாமல் கோலினுள் புகுத்தினார்.
ஜோர்தான் சார்பாக 67ஆவது நிமிடத்தில் யஸான் அலி நய்மாத் மிகவும் அருமையான கோல் ஒன்றைப் புகுத்தினார்.
ஆசிய கிண்ண சுற்றுப் போட்டியில் கத்தார் சார்பாக 7 போட்டிகளில் 8 கோல்களைப் போட்டதுடன் 2 கோல்களுக்கு உதவியமைக்காக சுற்றுப் போட்டியின் பெறுமதிவாய்ந்த வீரருக்கான விருது அக்ரம் அவிவுக்கு வழங்கப்பட்டது.
அத்துடன் அதிக கோல்களைப் போட்டதற்கான விருதையும் அக்ரம் அவிவ் வென்றெடுத்தார்.
ஆசிய கிண்ண கால்பந்தாட்டத்தில் இந்த இரண்டு விருதுகளை வென்ற மூன்றாவது வீரர் அவிவ் ஆவார்.
சிறந்த கோல் காப்பாளருக்கான விருதை கத்தார் கோல்காப்பாளர் மெஷால் பர்ஷாம் வென்றெடுத்தார்.