காதலர் தினம் இப்படிதான் உருவானதா..? பெப்ரவரி 14-ஐ கொண்டாடுவதற்கு முன் அதன் வரலாறு தெரிஞ்சுக்கோங்க..!
13 மாசி 2024 செவ்வாய் 09:41 | பார்வைகள் : 1988
உலகம் முழுவதும் அனைத்து ஜீவராசிகளும் கொண்டாடும் வார்த்தைகளில் ஒன்று தான் காதல். அப்பாவின் பாசம், அம்மாவின் பாசம், குழந்தைகள் மீதான பாசம், நண்பர்கள், உறவினர்கள் என ஒவ்வொருவரின் மீதும் ஒவ்வொரு விதமான பாசம் கலந்த காதலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உணர்வுப்பூர்வமாக அனுபவிக்கும் காதலை அனைவரும் கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 ஆம் திகதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளுக்கு முந்தைய வாரத்தில் இருந்தே கொண்டாட்டங்கள் தொடங்குகிறது. இந்த நாளை நாமும் நமக்குத் தெரிந்தப் படி கொண்டாடுகிறோம். ஆனால் இந்த நாள் ஏன் கொண்டாடப்படுகிறது? என்பது குறித்து ஒரு நாளும் யோசித்து இல்லை.. இதோ காதல் தினத்தின் வரலாறு மற்றும் சிறப்பம்சம் குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்…
காதலர் தின வரலாறு : காதலர் தினம் கொண்டாடுவதற்கான காரணங்கள் எதுவும் சரியாகத் தெரியவில்லை என்றாலும், ரோமானியப் பேரரசில் இருந்து காதலர் தினம் கொண்டாடப்படுவதாக வரலாறுகள் கூறுகிறது. ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் ஆண்கள் திருமணம் செய்துக் கொண்டால் அவர்களின் வீரம் குறைந்துவிடும் என்பது அந்நாட்டு அரசரின் எண்ணமாக இருந்துள்ளது. எனவே தான் அந்நாட்டில் உள்ள ஆண்கள் திருமணம் செய்துக் கொள்வதற்குத் தடை விதித்துள்ளார்.இந்த சூழலில் தான், திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற நினைப்பில் இருந்த ஆண்களுக்கு வேலண்டைன் எனும் பாதிரியார் திருமணம் செய்த வைத்துள்ளார்.
இந்த விஷயம் மன்னனுக்கு தெரிய வந்த போது பாதிரியார் வேலண்டைனுக்கு பெப்ரவரி 14 ஆம் திகதி அன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது நினைவாக ஒவ்வொரு பெப்ரவரி 14 ஆம் திகதி காதலர் தினம் கொண்டாடப்படுவதாக வரலாறுகள் கூறுகிறது. இது பொதுவான விஷயமாக இருந்தாலும், ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு விதமான வரலாறுகளுடன் இந்த நாளைக் கொண்டாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.