அமெரிக்காவில் ரெயில் நிலையத்தில் துப்பாக்கி சூடு- ஒருவர் பலி
13 மாசி 2024 செவ்வாய் 09:44 | பார்வைகள் : 3052
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிராங்க்ஸ் சுரங்கப்பாதை ரெயில் நிலையத்தில் ஏராளமான பயணிகள் ரெயிலுக்காக காத்து கொண்டிருந்தனர்.
இளைஞர்களை கொண்ட இரு குழுக்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு மோதல் வெடித்த நிலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர்.
துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
5 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
துப்பாக்கி சூடு நடத்தியது யார்? எதற்காக தாக்குதல் நடத்தப்பட்டது உள்ளிட்ட தகவல்கள் உடனடியாக தெரியவில்லை.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, ரெயில் நிலையத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 34 வயதுடைய ஒருவர் பலியானார். ஒரு சிறுமி, ஒரு சிறுவன் உள்பட 5 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இது ஒரு தற்செயலான துப்பாக்கிச் சூடு என்று நாங்கள் நம்பவில்லை. தனி நபர் கண்மூடித்தனமாக ரெயில் அல்லது ரெயில் நிலையத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நம்பவில்லை.
இந்த சம்பவம் ரெயிலில் செல்லும் போது சண்டையிட்ட இரண்டு குழுக்களுக்கு இடையே நடந்துள்ளது. அந்த ரெயில் நிலையத்துக்குள் ரெயில் வந்தபோது ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார்.
மக்கள் ரெயிலில் இருந்து இறங்கி பிளாட்பாரத்தில் ஓடத் தொடங்கினர். மேலும் பிளாட்பாரத்திலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.