குழந்தை பெற்றெடுக்கும் ஊழியருக்கு மிகப்பெரிய சலுகை வழங்கும் தென்கொரிய நிறுவனம்
13 மாசி 2024 செவ்வாய் 11:30 | பார்வைகள் : 3582
தென் கொரியாவில் குழந்தை பிறப்பு விகிதமானது சற்று குறைவாகவே காணப்படுகின்றது.
இதனை முன்னிட்டு தென்கொரியாவில் மிகப்பாரிய நிறுவனம் ஒன்று, குழந்தையை பெற்றெடுக்கும் தங்கள் ஊழியர்களுக்கு ரூ. 2 கோடிக்கு மேல் வழங்குகிறது.
தங்கள் நாட்டில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில், தென் கொரியாவின் முன்னணி கட்டுமான நிறுவனமான Booyoung Group, தனது ஊழியர்களுக்கு மிகப்பாரிய சலுகையை அறிவித்துள்ளது.
ஒவ்வொரு முறையும் குழந்தைகள் பிறக்கும் போது 100 million Korean Won (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ. 2.35 கோடி) கொடுப்பார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, கடந்த மூன்று ஆண்டுகளாக, அதாவது 2021 முதல் 70 குழந்தைகளைப் பெற்றெடுத்த ஊழியர்களுக்கு மொத்தம் 7 பில்லியன் கொரியன் வோன் (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.165 கோடி) ரொக்கப் பணம் வழங்குவதாகவும் நிறுவனம் அறிவித்தது. அதாவது, ஓவ்வொரு குழந்தைக்கும் ரூ.2.35 கோடி (LKR) வழங்க திட்டமிட்டுள்ளது.
மூன்று குழந்தைகளைக் கொண்ட ஊழியர்களுக்கு ரூ.7.07 கோடி (LKR) ரொக்கம் அல்லது வாடகை வீட்டு வசதி வழங்கப்படும்.
இந்த சலுகைகள் ஆண் மற்றும் பெண் ஊழியர்களுக்கு பொருந்தும்.
தென் கொரியா 2022-இல் உலகின் மிகக் குறைந்த கருவுறுதல் விகிதத்தைக் (0.78) கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.