வெடிக்கும் உலக போர் - இஸ்ரேல் நாட்டின் திட்டம்
13 மாசி 2024 செவ்வாய் 15:13 | பார்வைகள் : 2851
காசா பகுதிகளுக்குள் புகுந்த இஸ்ரேல் மிக கொடூரமான தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இஸ்ரேலின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு காசாவில் அமைந்துள்ள முக்கிய நகரான ரஃபாவில் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.
ரஃபா அதிக மக்கள் தொகையைக் கொண்ட நகரம் என்பதால் இது பேரழிவை ஏற்படுத்தலாம் எனப் பலரும் எச்சரித்துள்ளனர்.
இருப்பினும் தாக்குதல் திட்டத்தில் பின்வாங்கப் போவது இல்லை என்று தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அதேநேரம் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்தப் போரில் வெற்றி தாங்கள் தொட்டுவிடும் தூரத்தில் தான் இருப்பதாகத் தெரிவித்த நெதன்யாகு, நிச்சயம் வெல்லப் போகிறோம் என்றும் தெரிவித்தார்.
ஹமாஸ் படையை முழுமையாக அழிக்க வேண்டும் என்பதே தங்கள் இலக்கு என்ற நெதன்யாகு, ரஃபாவில் ஹமாஸ் படையின் கோட்டை இருப்பதாகவும் எஞ்சியிருக்கும் அந்த பயங்கரவாத வீரர்களைக் குறிவைத்து அழிப்பதே தங்கள் கருத்து என்றும் அவர் கூறினார்.
இஸ்ரேல் முதலில் வடக்கு காசாவில் தாக்குதலை நடத்திய நிலையில், பலரும் தெற்கு காசாவில் உள்ள ரஃபாவுக்கு தான் வந்தனர்.
காசாவில் வசிக்கும் 23 லட்சம் மக்கள்தொகையில் சரி பாதிக்கும் மேலானவர்கள் ரஃபாவில் தான் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அங்கே ஏற்கனவே உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவப் பொருட்களுக்குப் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதாக ஹமாஸ் கூறுகிறது.
இதனால் அங்கே மிகக் கடுமையான மனிதாபிமான நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேலின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் முக்கிய நட்பு நாடுகளான அமெரிக்கா உட்படப் பல வெளிநாடுகள் ரஃபா மீதான தாக்குதல் திட்டம் குறித்து விமர்சித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், ஓமன் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு ஆகியவை ரஃபா தாக்குதல் திட்டம் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளது.