Paristamil Navigation Paristamil advert login

சட்டசபையில் 2 தனித் தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றம்

சட்டசபையில்  2 தனித் தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றம்

14 மாசி 2024 புதன் 10:05 | பார்வைகள் : 2665


ஒரே நாடு ஒரே தேர்தல்', தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக 2 தனித் தீர்மானங்களை சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார். இந்த தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் 3ம் நாள் அமர்வில் முதல்வர் ஸ்டாலின், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தினை நடைமுறைப்படுத்த கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தியும், மக்கள் தொகை அடிப்படையில் பார்லிமென்ட் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கையை கைவிடுமாறும் இரண்டு தனித் தீர்மானங்களை முன்மொழிந்தார். 

பின்னர் ஸ்டாலின் பேசியதாவது: நெருக்கடியான அரசியல் சூழ்நிலை நமக்கு ஏற்பட்டிருக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற மோசமான எதேச்சதிகாரத்தை கடுமையாக எதிர்த்தாக வேண்டும். அதேபோல், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரால் தமிழகத்தின் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைக்கும் செயலையும் முறியடித்தாக வேண்டும். இவை இரண்டும் மக்களாட்சியை குலைக்கும் செயல்.

ஒரே நேரத்தில் தேர்தலால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபையை கலைக்கும் நிலை ஏற்படும். மத்தியில் ஆட்சி கவிழ்ந்தால் அனைத்து மாநிலத்திலும் ஆட்சியை கலைத்து விடுவார்களா? ஒரே நாளில் பார்லிமென்ட் தேர்தலை கூட நடத்த முடியாத சூழலே உள்ள நிலையில், பின்னர் எப்படி 'ஒரே நாடு ஒரே தேர்தல்' சாத்தியமாகும்?

மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்கு தரும் தண்டனையாக தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை அமைந்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி எண்ணிக்கையை குறைத்தால், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். தற்போதுள்ள லோக்சபா, ராஜ்யசபா, சட்டசபையில் உறுப்பினர்கள் எண்ணிக்கை வடமாநிலங்களை விட குறைந்துவிடும். 

மறுசீரமைப்பு என்ற பெயரில் தொகுதிகளின் எண்ணிக்கையை ஒருபோதும் குறைக்கக்கூடாது. இதுபோன்ற பாரபட்சங்கள் தான், மாநிலங்களுக்கான நிதி பகிர்வில் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. இது தென்னிந்தியாவின் மீது தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக உள்ளது. 

அனைத்து மாநிலங்களிலும் மக்கள் தொகை கட்டுப்படுத்துதல் நடவடிக்கைகளை தீவிரமாக்கும் வரை தொகுதிகள் எண்ணிக்கை இப்படியே தொடர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதனைத்தொடர்ந்து மற்ற உறுப்பினர்கள் இந்த தீர்மானங்கள் மீது விவாதம் நடத்தினர். பின்னர் இந்த 2 தீர்மானங்களும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்