Paristamil Navigation Paristamil advert login

வீடுகளுக்கான சூரிய மின் திட்டம் அறிமுகம்: 300 யூனிட் வரை இலவச மின்சாரம்

வீடுகளுக்கான சூரிய மின் திட்டம் அறிமுகம்: 300 யூனிட் வரை இலவச மின்சாரம்

14 மாசி 2024 புதன் 10:11 | பார்வைகள் : 1898


சூரிய மின்சக்தியைப் பயன்படுத்தி, மாதம் 3--00 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறும் திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று முறைப்படி அறிவித்தார். இதற்காக நடைமுறைகள் அனைத்தும், ஆன்லைன் வாயிலாகவே நடைபெறும்.

கடந்த மாதம், 22ம் தேதி உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. அன்று, வீடுகளில் சூரிய மின்சக்தி உற்பத்திக்கான பேனல்கள் அமைக்க மானியமும், அதில் உற்பத்தியாகும் மின்சாரத்தில், 300 யூனிட் வரை இலவசமாக பயன்படுத்தும் திட்டம் குறித்த அறிவிப்பை, பிரதமர் மோடி வெளியிட்டார்.

கடந்த, 1ம் தேதி மத்திய பட்ஜெட்டில் இதற்கான திட்டத்தை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். நாடு முழுதும், ஒரு கோடி வீடுகளில், சூரிய மின்சக்தி வசதி ஏற்படுத்துவது இந்த திட்டம். இதன் வாயிலாக, ஒரு குடும்பத்துக்கு, ஆண்டுக்கு, 15,000 முதல் 18,000 ரூபாய் வரை சேமிப்பு கிடைக்கும். மேலும், உபரியாக உள்ள மின்சாரத்தை, மாநில மின்சார வாரியத்துக்கும் விற்கலாம்.

மின்சார வாகனங்களை சார்ஜிங் செய்வதற்கு பயன்படுத்தலாம். இந்த திட்டத்தின் வாயிலாக சூரிய மின்தகடுகள் வினியோகஸ்தர்கள், அதை நிறுவும் நிறுவனங்கள் அதிகரிக்கும் என்பதால், புதிய தொழில் வாய்ப்புகளும், திறனுள்ள தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என, பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சூரிய வீடுகள் - இலவச மின்சார திட்டம் என்ற 'பி.எம். சூர்ய கர் -- முப்த் பிஜ்லி யோஜனா'வை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முறைப்படி அறிவித்தார்.</p><br><p>இது குறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அவர் கூறியுள்ளதாவது: மாசு ஏற்படுத்தாத சூரிய மின்சக்தி உற்பத்தியை அதிகளவில் பயன்படுத்தும் வகையிலும், தொடர் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையிலும் இந்த திட்டம் துவங்கப்படுகிறது. நாடு முழுதும், ஒரு கோடி வீடுகளில் இதை செயல்படுத்த திட்டமிட்டுஉள்ளோம்.

இந்த திட்டத்தின் வாயிலாக, அந்த குடும்பத்துக்கு, மாதம், 300 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும். இந்த திட்டத்தின் வாயிலாக, இந்தத் துறையில், 75,000 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் கிடைக்கும். நீடித்த வளர்ச்சி மற்றும் மக்களின் நலனை கருத்தில் வைத்து, இந்த திட்டம் துவக்கப்படுகிறது. சூரிய மின்தகடுகளை வீடுகளில் அமைக்க, மத்திய அரசு மானியம் அளிக்கும்.

இந்த மானியம், பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். மேலும் அதிக சலுகையுடன் கூடிய வங்கிக் கடனும் கிடைக்கும். மக்களுக்கு அதிக பாரம் இல்லாத வகையில், இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துடன் தொடர்புடைய அனைவரும், அனைத்து நிறுவனங்கள், மின்சார வாரியங்கள் அடங்கிய, ஒருங்கிணை தேசிய ஆன்லைன் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.</p><br><p>நாடு முழுதும் இந்த திட்டம் சென்றடைய, அனைத்து பஞ்சாயத்துகளும் இதை பிரபலபடுத்த வேண்டும். இதன் வாயிலாக அந்தப் பகுதியில் உள்ள மக்கள் பலன் பெறுவர்.

இந்த திட்டத்தால், மின்சார பில் குறைவதுடன், கூடுதல் வருவாயையும் பெற முடியும். மேலும், அதிக வேலைவாய்ப்பையும் அளிக்கும். அளப்பரிய சூரிய மின்சக்தியை முழுதும் பயன்படுத்த, இந்த திட்டத்தில் அனைவரும் சேருவதை, இளைஞர்கள் ஊக்கவிக்க வேண்டும். https://pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் இதற்காக விண்ணப்பிக்கலாம். இவ்வாறு மோடி கூறியுள்ளார்.

விண்ணப்பிப்பது எப்படி?

1. https://pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில், சோலார் நிறுவுவதற்கான விண்ணப்பம் என்பதில் பதிவு செய்ய வேண்டும். அதில், உங்களுடைய மாநிலம், மின் சேவை அளிக்கும் நிறுவனம், உங்களுடைய மின்சார எண், மொபைல்போன் எண், இ- - மெயில் ஆகியவற்றை பதிவு செய்யவும்

2. இவ்வாறு பதிவு செய்தவுடன், மின்சார எண் மற்றும் மொபைல்போன் பயன்படுத்தி, இணையதளத்தில் உள்ளே சென்று, சோலார் நிறுவுவதற்கான விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும்

3. மின்சேவை அளிக்கும் நிறுவனத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கவும். உங்களுடைய வீட்டில் நிறுவுவதற்கு சாத்தியமுள்ளது என்று ஒப்புதல் அளிக்கப்பட்ட பின், மின்சார வாரியத்தில் பதிவு செய்துள்ள எந்த ஒரு நிறுவனத்தின் வாயிலாகவும், சூரிய மின்தகடுகளை நிறுவலாம்

4. அவ்வாறு மின்தகடுகளை நிறுவிய பின், அது தொடர்பான விபரங்களை, இணையதளத்தில் பதிவு செய்து, மீட்டருக்காக விண்ணப்பிக்கவும்

5. மீட்டர் நிறுவப்பட்டு, மின்சேவை வழங்கும் நிறுவனம் ஆய்வு செய்து, இணையதளத்தில், மின்சார உற்பத்தி செய்வதற்கான அனுமதி சான்றிதழை வழங்கும். இவ்வாறு சோலார் மின்தகடு நிறுவியதற்கான அறிக்கை உருவாகும். அதன்பின், வங்கிக் கணக்கு உள்ளிட்ட விபரங்களை, இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதற்கு, 30 நாட்களுக்குள், உங்களுடைய வங்கிக் கணக்குக்கு, மானியத் தொகை செலுத்தப்படும்.

மானியம் எவ்வளவு?

மூன்று கிலோவாட் வரை, ஒவ்வொரு கிலோவாட்டுக்கும், 18,000 ரூபாய் மானியம் கிடைக்கும். மூன்று முதல், 10 கிலோவாட் வரை நிறுவினால், முதல் மூன்று கிலோ வாட்டுக்கு, தலா 18,000 ரூபாயும், அதற்கடுத்த ஒவ்வொரு கிலோ வாட்டுக்கும், தலா, 9,000 ரூபாயும் மானியமாக கிடைக்கும்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்