குழப்பத்தில் முடிந்த ஹரிஹரன் நிகழ்ச்சி - வருவாயை மீளளிப்பதாக அறிவித்த இந்திரகுமார்
15 மாசி 2024 வியாழன் 12:48 | பார்வைகள் : 2299
ஹரிகரனின் இசை நிகழ்ச்சியில், நுழைவு சீட்டு கட்டணத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற வருவாயை மீளளிப்பதாக நொதேர்ன் யூனியின் தலைவர் பத்மநாதன் இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இசை நிகழ்வில் ஏற்பட்ட குழப்ப நிலைக்கு விளக்கமளிக்கும் வகையில் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த இசை நிகழ்ச்சிக்கு இலவச அனுமதி வழங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த நிகழ்ச்சிக்கு வெளிநாடு முதல் உள்நாடு வரை பலரும் பணம் செலுத்தி டிக்கெட்டினைப் பெறுவதற்கும் தயாராக இருந்துள்ளனர்.
இதன்படி இலவச டிக்கெட்டுக்களைப் பெற்று பலர் நின்று பார்க்கும் போது சிலர் மட்டும் இலவச டிக்கட்டுக்களைப் பெற்று ஆசனங்களைப் பெறுவதைத் தவிர்க்கும் முகமாக ஆசனங்களை பகுதி பகுதியாக பிரித்து குறிப்பிட்ட தொகைகளுக்கு கேட்பவர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானித்திருத்தாலும் டிக்கட் நுகர்வினை கட்டுப்படுத்தும் நோக்குடனே விலைகள் நிர்ணயிக்கப்பட்டது என நொதேர்ன் யூனியின் தலைவர் பத்மநாதன் இந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறித்த நிகழ்விற்கு டிக்கெட் விற்பனையின் மூலம் கிடைக்கப்பெறும் நிதியை யாழ் கல்வி மேம்பாட்டு நிதியத்திற்கு (YES) வழங்குவதற்கு தீர்மானித்தாகவும், இது வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தமது உயர் கல்வியை தடையின்றி பெற்றுக்கொள்ள உறுதுணையாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் விமர்சனங்கள் எழுந்த போதிலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற 120,000 இற்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுக்கும் , கலைஞர்களுக்கும் குறித்த அறிக்கையின் ஊடாக நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் நிகழ்வில் ஏற்பட்ட சிறு தடங்கல் மற்றும் அசௌகரியம் காரணமாக, கிடைக்கப்பெற்ற வருவாய் முழுவதையும் மீளளிப்பதற்கு முடிவு செய்துள்ளதாகவும், தங்களால் செலுத்தப்பட்ட பணம் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மாணவர்களின் கல்விச் செயற்பாட்டுக்கு பயன்படுத்த எண்ணுவோர் அவ்வாறே விட்டு விட, பணத்தினை மீளப் பெற விரும்புபவர்கள் தரப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்தை 0777315262 தொடர்பு கொள்ளுமாறும் பத்மநாதன் இந்திரகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.