சச்சின், பாண்டிங் என ஜாம்பவான்களின் சாதனையை தகர்த்த கேன் வில்லியம்சன்!
16 மாசி 2024 வெள்ளி 08:46 | பார்வைகள் : 1888
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் வில்லியம்சன் சாதனை சதம் விளாசினார்.
ஹாமில்டனில் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் நடந்தது.
முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 242 ஓட்டங்களும், நியூசிலாந்து 211 ஓட்டங்களும் எடுத்தன. பின்னர் இரண்டாவது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா 235 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதன்மூலம் நியூசிலாந்து அணிக்கு 267 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் கான்வே 17 ஓட்டங்களும், டாம் லாதம் 30 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
ஆனால் கேன் வில்லியம்சன் மற்றும் வில் யங் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றி பெற வைத்தனர். வில்லியம்சன் 133 ஓட்டங்களும், வில் யங் 60 ஓட்டங்களும் விளாசினர்.
கேன் வில்லியம்சன் அடித்த 32வது சதம் இதுவாகும். இதன்மூலம் அவர் இமாலய சாதனை படைத்தார். குறைந்த இன்னிங்சில் 32 டெஸ்ட் சதங்கள் என்ற ரிக்கி பாண்டிங், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை வில்லியம்சன் முறியடித்தார்.
பாண்டிங் 176 இன்னிங்சிலும், சச்சின் டெண்டுல்கர் 179 இன்னிங்சிலும் 32 சதங்களை எட்டிய நிலையில், வில்லியம்சன் 172 இன்னிங்சிலேயே இந்த சாதனையை செய்துள்ளார்.
இதற்கிடையில் நியூசிலாந்து அணி 2-0 என டெஸ்ட் தொடரை வென்று, 92 ஆண்டுகளுக்கு பின் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.