உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் பல் வலி..
16 மாசி 2024 வெள்ளி 13:27 | பார்வைகள் : 2254
பல் வலி தானே என நாம் சாதாரணமாக எடுத்துக்கொண்டு சிகிச்சை எடுக்காமல் இருந்தால், அது நம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையே பாதிக்குமாம். அது பற்றி விளக்குகிறது இந்தக் கட்டுரை.
பல் வலியை உதாசீனப்படுத்துவதால் வரக்கூடிய பாதிப்புகள் : பல் வலியை உதாசீனப்படுத்துவதோ அல்லது பல் வலியோடு வாழ்வதோ எந்தப் பிரச்சனையும் ஏற்படுத்தாது எனப் பலரும் நினைக்கிறார்கள். ஆனால் இப்படி செய்வதால் வாய் சுகாதாரம் மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திலும் மிகப்பெரிய பாதிப்பு வரக்கூடும். பற்களில் ஏற்படக்கூடிய அசௌகர்யங்களை நாம் உடனுக்குடன் கவனிக்காமல் இருந்தால், ஒன்றன் பின் ஒன்றாக பல பிரச்சனைகள் வரும். இதுபோன்ற வலிகள் தான் பற்களில் சொத்தை இருப்பதை நமக்கு காண்பித்து கொடுக்கும்.
பற்கள் சொத்தையாதல் : நீங்கள் பல் வலியை கவனிக்காமல் விட்டால், அது பற்களில் சொத்தை அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துவிடும். பற்களில் குழிகள் விழுவதற்கும் பல் வலிக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. பற்களின் வெளிப்புறத்தில் பாதுகாப்பு அடுக்குகளாக இருக்கும் எனாமலை பாக்டீரியா சேதப்படுத்தும் போது குழி ஏற்படுகிறது. இதற்கு உடனடியாக சிகிச்சை எடுக்காவிட்டால் பற்களின் ஆழம் வரை குழி விழுந்து நரம்புகளையும் ரத்த நாளங்கலையும் பாதிக்க வாய்ப்புள்ளது. இதனால் கடுமையான வலி, தொற்றுகள் மட்டுமின்றி பற்களையே இழந்துவிடும் ஆபத்துமுள்ளது.
ஈறுகளில் நோய் உருவாதல் : பல் வலியை குணப்படுத்தாவிட்டால் ஈறுகளில் நோய் உருவாக ஆரம்பிக்கும். இதன் காரணமாக பற்களின் கட்டமைப்பே பாதிப்பிற்குள்ளாகும். இதன் ஆரம்ப நிலைதான் ஈறுகளில் வீக்கம் அல்லது ரத்தக்கசிவு. இதை சரி செய்யாவிட்டால் வளர்ச்சியடைந்து ஈறுகளையும் அதனைச் சார்ந்துள்ள எலும்புகளையும் தாக்கும். சில சமயங்களில் இதனால் டயாபடீஸ், இதய நோய்கள் கூட வர வாய்ப்புள்ளது.
தொற்றுகள் பரவுதல் : பல் வலியை புறக்கணிப்பதால் தொற்றுகள் பரவுவதற்கு நாமே காரணமாகிறோம். பற்களில் சீழ் படியும் போது, வீக்கமும் காய்ச்சலும், சில சமயங்களில் ரத்த ஓட்டத்தில் கலந்தால் தீவிர பிரச்சனைகளையும் உண்டுபண்ணும். பல் வலியை புறக்கணிப்பது நம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையே உதாசீனப்படுத்துவதற்கு சமமாகும்.
நாள்பட்ட பல் வலி : தொடர்ச்சியாக பற்களில் வலியும் அசௌகர்யமும் இருக்கும் நபரின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிப்பிற்குள்ளாகும். அவர்களால் சாப்பிடவோ, பேசவோ, தூங்கவோ முடியாது. இதனால் உடலளவிலும், மனதளவிலும் மிகவும் பலவீனமாக உணர்வார்கள். ஆகவே லேசான பல் வலி இருக்கும் போதே மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
பாதிப்புக்குள்ளாகும் உடல் ஆரோக்கியம் : பற்களின் சுகாதரத்திற்கும் நமது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பல் வலியை உதாசீனப்படுத்துவதால் நாளடைவில் இதய நோய்கள், சுவாசப் பிரச்சனைகள், பேர்கால சமயத்தில் சிக்கல்கள் வர வாய்ப்புள்ளதாக எச்சரிக்கின்றனர். பல் சொத்தையில் இருக்கும் பாக்டீரியா உடலின் ரத்த ஓட்டத்தில் கலந்து அழற்சிகளை தூண்டுவதால், உடலில் உள்ள மற்ற பாகங்களும் பாதிக்கப்படுகிறது. ஆகவே உங்கள் பற்களை அடிக்கடி பரிசோதனை செய்து கொள்ளுங்கள். வாய் சுகாதரத்தை பேணுங்கள். எந்தவொரு வலியோ அசௌகர்யமோ பற்களில் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை எடுங்கள்.