Paristamil Navigation Paristamil advert login

பன்னீர் மஞ்சூரியன்

பன்னீர் மஞ்சூரியன்

16 மாசி 2024 வெள்ளி 13:32 | பார்வைகள் : 2070


பன்னீர் கொண்டு செய்யப்படும் பன்னீர் பட்டர் மசாலா, பன்னீர் கிரேவி, பன்னீர் 65, பன்னீர் மஞ்சூரியன் போன்றவற்றை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

ஃப்ரைடு ரைஸ், நூடுல்ஸ் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட ருசியான பன்னீர் மஞ்சூரியன் கிரேவியை வீட்டிலேயே எப்படி எளிய செய்முறையில் செய்து சாப்பிடலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள் :

பன்னீர் துண்டுகள் - 200 கிராம்

மைதா - 1/2 கப்

சோள மாவு - 1/4 கப்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

சோயா சாஸ் - 1 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

எண்ணெய் - தேவைக்கேற்ப

உப்பு - சுவைக்கேற்ப

தண்ணீர் - 1/2 கப்

சாஸ் செய்வதற்கு தேவையானவை :

வெங்காயம் - 1

குடைமிளகாய் - 1/2

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 2

மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

சோயா சாஸ் - 2 டீஸ்பூன்

தக்காளி கெட்சப் - 3-4 டேபிள் ஸ்பூன்

வினிகர் - 1 டீஸ்பூன்

சர்க்கரை - 1 டீஸ்பூன்

சோள மாவு - 2 டீஸ்பூன்

ஸ்பிரிங் ஆனியன் - ஒரு கையளவு

உப்பு - சுவைக்கேற்ப

தண்ணீர் - தேவையான அளவு


செய்முறை :

முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சோள மாவு, மிளகாய் தூள், சோயா சாஸ், இஞ்சி பூண்டு பேஸ்ட், எண்ணெய், சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஓரளவு கெட்டியாக கலந்து கொள்ளுங்கள்.

அடுத்து கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் கலந்து வைத்துள்ள மாவில் பன்னீர் துண்டுகளை பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பின்னர் வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், குடைமிளகாய், தக்காளியுடன் தேவைக்கேற்ப உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள்.

பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடங்கள் அதன் பச்சை வாசனை போகும் அளவிற்கு வதக்கவும்.

அடுத்து அதனுடன் மிளகாய் தூளை சேர்த்து நன்கு வதக்கி பிறகு அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக்கொள்ளுங்கள்.

பின்னர் அதில் தக்காளி கெட்சப், சோயா சாஸ் மற்றும் வினிகர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து பன்னீர் பிரட்டிய மாவு மிச்சம் இருந்தால் அவற்றையும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

இந்த கிரேவியானது சற்று கெட்டியாகத் தொடங்கியதும் வறுத்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து கலந்து இரண்டு நிமிடங்களுக்கு சமைக்கவும்.

கடைசியாக கிரேவியின் மேல் ஸ்பிரிங் ஆனியனை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான பன்னீர் மஞ்சூரியன் கிரேவி ரெடி.--

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்