'அமரன்' வார்த்தைக்கு என்ன அர்த்தம்?
17 மாசி 2024 சனி 10:51 | பார்வைகள் : 1360
தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராக மூன்று தீவிரவாதிகளைக் கொன்று வீரமரணம் அடைந்தார். அவருடைய உயிர்த்தியாகத்திற்கு அசோக சக்கரம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
அவரது பயோபிக் படமான 'அமரன்' படத்தை கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம், சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தை கவுதம் கார்த்திக் நடித்த 'ரங்கூன்' படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார்.
பழைய படத் தலைப்பை இப்படத்திற்கு வைத்துள்ளது குறித்து சிலர் கேள்விகளை எழுப்பியிருந்தனர். கே ராஜேஷ்வர் இயக்கத்தில், கார்த்திக், பானுப்ரியா மற்றும் பலர் நடிப்பில் 'அமரன்' என்ற பெயரில் ஒரு படம் வெளிவந்துள்ளது. எதற்கு 'அமரன்' என்ற பழைய தலைப்பு என்பது குறித்து இயக்குனர் பதிவிட்டுள்ளார்.
“இப்படத்தின் திரைக்கதைக்கு நான் எழுதிய முதல் வார்த்தை 'அமரன்'. அதற்கு 'அழியாதவன், போர்வீரர், தெய்வீகமானவர்' என்று அர்த்தம். இந்த நினைவு கூறத்தக்க தலைப்பை எங்களுக்கு வழங்க சம்மதித்த இயக்குனர் கே ராஜேஷ்வர் அவர்களுக்குத் இத்தருணத்தில் நன்றி கூறுகிறேன். நன்றி சார், எனக்கு பெருமிதமாக உள்ளது.
எனக்காக அவரை அணுகி உறுதியாக பெற்றுத் தந்த எனது அன்புக்குரிய கவுதம் கார்த்திக் மற்றும் கார்த்திக் சார் ஆகியோருக்கு நன்றி. இதை ஒருங்கிணைத்த பிஆர்ஓ சிங்காரவேலு மற்றும் அன்னலட்சுமி பிக்சர்ஸ் சுவாமிநாதன் சார் ஆகியோருக்கு சிறப்பு நன்றி,” என்று குறிப்பிட்டுள்ளார்.