இலங்கை ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க திட்டம்?
18 மாசி 2024 ஞாயிறு 04:47 | பார்வைகள் : 2065
ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்கும் யோசனை கொண்டு வரப்படுமாயின் அதனை எதிர்ப்பது என சகல எதிர்க்கட்சிகளும் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
இது சம்பந்தமாக நீதியான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் தலைவர் கரு ஜயசூரிய கருத்தரங்கொன்றை ஏற்பாடு செய்திருந்ததுடன் அதில் கலந்துக்கொண்ட ஐக்கிய மக்கள் சக்தி உட்பட பிரதான எதிர்க்கட்சிகள் யோசனைக்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.
அங்கு உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க வேண்டும் என்பது தமது கட்சியின் கொள்கையாக இருந்த போதிலும் ஜனாதிபதி தேர்தலுக்கு ஆறு மாதங்களே இருக்கும் நிலைமையில், அது பற்றி பேசுவது அடிப்படையற்றது என பகிரங்கமாக கூறியுள்ளார்.
இந்த நிலையில், கருத்தரங்கு முடிந்த பின்னர், கரு ஜயசூரியவை சந்தித்துள்ள சுதந்திர மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியான முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தனது எதிர்ப்பை முன்வைத்துள்ளதுடன் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது என்ற யோசனை ஒரு சூழ்ச்சி எனவும் அதில் சிக்கிக்கொள்ள வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள கரு ஜயசூரிய, ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரே நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அதற்கு தேவையான நிலைப்பாடுகளை மாத்திரமே தாம் உருவாக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.